கோவையில் முழு ஊரடங்கு: மேம்பாலங்கள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


கோவையில் முழு ஊரடங்கு: மேம்பாலங்கள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 20 July 2020 9:15 AM IST (Updated: 20 July 2020 9:15 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு காரணமாக கோவையில் சாலைகள் வெறிச்சோடின. அத்துடன் மேம்பாலங்கள் அடைக்கப்பட்டன.

கோவை,

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கோவையில் நேற்று மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள், பால் வினியோக கடைகள் தவிர வேறு எந்த கடையும் திறக்கப்படவில்லை.

கோவையில் மிகவும் பரபரப்பாக காணப்படும் கோவை-அவினாசி சாலை, திருச்சி சாலை உள்பட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. வாகனங்கள் செல்லாததால் போக்குவரத்து சிக்னல்கள் செயல்படவில்லை. முக்கிய சிக்னல்களில் மட்டும் ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முக்கிய சாலைகளின் சந்திப்புகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

கூடுதல் போலீசார்

கோவை கலெக்டர் அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பஸ் நிலையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோன்று சாலையின் முக்கிய இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து அங்கும் கண்காணித்தனர்.

மேலும் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். சரியான காரணங்கள் இல்லாமல் வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிலரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். முழு ஊரடங்கின்போது பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் ஆம்புலன்ஸ், போலீஸ் மற்றும் அரசு வாகனங்கள் வந்தால் அவற்றிற்கு மட்டும் எரிபொருள் நிரப்பப்பட்டன. மற்ற வாகனங்களுக்கு கொடுக்கவில்லை.

தீவிர கண்காணிப்பு

முழு ஊரடங்கின்போது வாகனங்கள் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் அவினாசி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலங்கள் ஆகியவை அடைக்கப்பட்டன. மேம்பாலத்தின் கீழ் ஒன்றிரண்டு வாகனங்கள் சென்றன. அதுபோன்று போலீசார் வாகனங்களில் ரோந்து சென்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சாலைகள் வெறிச்சோடியதால் பல இடங்களில் சிறுவர்கள் பம்பரம், கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் பஸ்நிலைய வணிக வளாகம், ஊட்டி சாலை மற்றும் முக்கிய சாலைகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை, மற்றும் நகரின் முக்கிய சாலைகள், பவானி ஆற்றுப்பாலம் உள்பட அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் நுழைவாயிலாக விளங்கும் ஓடந்துறை சோதனைச்சாவடியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பால், தீயணைப்பு வாகனம், மற்றும் ஆம்புலன்ஸ் வேன்கள் மட்டும் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டன. இ- பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி தலைமையில் தலைமையிடத்து துணை தாசில்தார் ரமேஷ், மண்டல தேர்தல் துணை தாசில்தார் சந்திரன் மற்றும் வருவாய் துறையினர் மேட்டுப்பாளையம் நகரில் உள்ள சோதனைச்சாவடிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் திடீர் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசின் விதிமுறைகளை மீறி வந்த வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் விதித்தனர்.

Next Story