கொரோனாவுக்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி வழங்க தயார் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


கொரோனாவுக்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி வழங்க தயார் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 20 July 2020 10:23 AM IST (Updated: 20 July 2020 10:23 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க தயாராக உள்ளோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

நாகர்கோவில்,

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் இரவு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக குமரி மாவட்டம் வந்தார். அவருடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் வந்திருந்தார். பின்னர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதன்பிறகு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையம், கொரோனா பரிசோதனை மையம், உள்நோயாளிகள் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக அவர்கள் குமரி மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார்கள். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில், கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது. குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு மையமான நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை முதலில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.

ஆலோசனை கூட்டம்

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர், இங்கு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் ரெடியாக உள்ளது குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும், தேவையானால் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்திக்கொடுப்பது குறித்தும், தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளதா? என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் குளச்சல் அரசு மருத்துவமனை மற்றும் குளச்சல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி கொரோனா பராமரிப்பு மையம், தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

ஆயுஷ் பரிந்துரை

குமரி மாவட்டத்தில் இரண்டாம் நாளாக கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து சிறப்பான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செவிலியர்கள் மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா அவசர சிகிச்சை பிரிவில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து அங்குள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை ஊக்கப்படுத்தினேன்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான அளவு மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் உள்ளன. அ.தி.மு.க. அரசு ஆயுர்வேத மருத்துவ முறைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் குமரி மாவட்டத்திற்கு அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பெறப்பட்டு, சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக ஆயுர்வேத மருத்துவர்கள் மிகவும் ஈடுபாட்டோடு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள், ஆயுர்வேத மருத்துவ முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள் அரசுக்கு சரியான முறையில் முன்மொழிவுக்கடிதம் அனுப்பினால், உரிய விதிமுறைகளோடு பரிசோதனைக்கான அனுமதியை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

230 படுக்கைகள்

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகள் கொண்ட 230 படுக்கைகளுடன் கொரோனா ஹெல்த் கேர் சென்டர் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள், முழுவதும் கவச உடையணிந்து கொரோனா வார்டுக்கு நேரடியாக சென்று நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

குளச்சல் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் குளச்சல், தூத்தூர் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் வகையில் கொரோனா கேர் சென்டர் அமைக்கப்பட்டு அங்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.

7 இடங்களில்...

பத்மநாபபுரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகள் கொண்ட 100 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பராமரிப்பு மையம் மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து வசதிகளையும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பான முறையில் செய்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் மொத்தம் 7 இடங்களில் கொரோனா பராமரிப்பு மையம் தயார் நிலையில் உள்ளது. அதில் 2 மையங்களில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆஸ்பத்திரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கண்டு பொதுமக்கள் யாரும் பதற்றமும், பீதியும் அடைய வேண்டாம். உங்களை பாதுகாக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

மீனவ பெண்களிடம் கலந்துரையாடல்

குளச்சலில் மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துரையாடி, மீனவ மக்களுக்காக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து, கொரோனா நோயினால் நீங்கள் அனைவரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை, உங்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்றுதாஸ், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, குளச்சல் உதவி சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், மாவட்ட மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் திமிர்த்தியூஸ், அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story