கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்வது எப்படி? போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை


கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தற்காத்து கொள்வது எப்படி? போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை
x
தினத்தந்தி 21 July 2020 5:55 AM IST (Updated: 21 July 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்று திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுரை வழங்கினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினருடன், போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இதனை திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி அவ்வப்போது ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இந்தநிலையில் கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது தொடர்பாக டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்கள் வெளியூர் பயணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதேபோல் வெளியூரில் இருந்து வருபவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க செல்லும்போது கண்டிப்பாக முக கவசம், கையுறை அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.

குறிப்பாக ஆட்கள் அதிகம் இல்லாத கடைக்கு சென்று பொருட்களை வாங்க வேண்டும். மக்கள் அதிகம் கூடுகிற இடங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது, ஒவ்வொரு முறையும் சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். இதுமட்டுமின்றி சூடான தண்ணீரில் வாய் கொப்பளித்து விட்டு, சூடான தண்ணீரையே குடியுங்கள். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

20 நிமிட மூச்சுப்பயிற்சி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவு மற்றும் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். வைட்டமின் ‘சி‘ போன்ற சத்தான மாத்திரைகளை சாப்பிடலாம். ‘ஆர்சனிக் ஆல்பம்‘ என்ற ஹோமியோபதி மாத்திரைகளை வாரம் 3 முறை அதிகாலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். கபசுர குடிநீர் குடிக்கலாம்.

ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் மூச்சுப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க தனி மையம் உள்ளது. அத்தகைய மையங்கள், அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறலாம்.

போலீஸ் துறைக்கு ஒத்துழைப்பு

சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நோய் கிருமிகள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய நிகழ்வுகளில் 20-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடாமல் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் ஆகும். பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடவேண்டாம்.

கொரோனா தொடர்பான உதவிக்கு போலீஸ் சேவை தேவைப்பட்டால் 100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 0451-2451500, 94981 01520 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற போலீஸ்துறை எல்லா உதவிகளையும் செய்ய காத்து இருக்கிறது. போலீஸ்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு டி.ஐ.ஜி. முத்துசாமி கூறினார்.

Next Story