ஒரேநாளில் 174 பேருக்கு பாதிப்பு: தி.மு.க. நகர செயலாளர் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் உள்பட கொரோனாவுக்கு 5 பேர் பலியாகினர். ஒரேநாளில் 174 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி கலசபாக்கம், சேத்துப்பட்டு, தெள்ளார் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், வேட்டவலம், அக்கூரில் தலா 8 பேர், செங்கம், பெருங்கட்டூரில் தலா 10 பேர், தண்டராம்பட்டில் 11 பேர், கிழக்கு ஆரணியில் 12 பேர், காட்டாம்பூண்டியில் 13 பேர், திருவண்ணாமலை நகராட்சியில் 15 பேர், நாவல்பாக்கத்தில் 23 பேர், வந்தவாசியில் 32 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வெம்பாக்கம், கீழ்பென்னாத்தூர், போளூர், துரிஞ்சாபுரம் போன்ற பகுதிகளிலும் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 174 பேரை சேர்த்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 233 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற தி.மு.க.நகர செயலாளர் உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-
தி.மு.க. நகர செயலாளர்
வந்தவாசியை சேர்ந்தவர் கோட்டை.அ.பாபு, நகர தி.மு.க. செயலாளர். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த சிலதினங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பெரணமல்லூரை அடுத்த சந்திரம்பாடி மதுரா கட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முனிசாமி (வயது 49), விவசாயி. இவர் கடந்த 14-ந் தேதி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பெரணமல்லூர் அருகே ஆவணியாபுரத்தில் 30 பேருக்கு கடந்த 18-ந் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தெள்ளார் பகுதியை சேர்ந்த ஆதிமூலம் (48) என்பவர் கடந்த 18-ந் தேதி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
2 முதியவர்கள் பலி
செங்கம் நகரில் உள்ள துக்காப்பேட்டையை சேர்ந்த முதியவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடல் சுகாதாரத்துறை சார்பில் அடக்கம் செய்யப்பட்டது.
அதேபோல் கீழ்பென்னாத்தூரை அடுத்த கணியாம்பூண்டியை சேர்ந்த முதியவர் கடந்த 18-ந் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பினால் சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் கணியாம்பூண்டியில் சுகாதாரத்துறையினரால் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story