150-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


150-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2020 5:15 AM GMT (Updated: 22 July 2020 5:05 AM GMT)

தேனி மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து, 150-க்கும் மேற்பட்ட இடங்களில் தி.மு.க.வினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி,

தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்தும், அதிகரிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கருப்புக்கொடி ஏந்தியபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் கருப்புக் கொடியுடன் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி கே.ஆர்.ஆர். நகரில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நகர பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மற்ற இடங்களில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும், மின்கட்டணம் அதிகரிப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆண்டிப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் வீட்டின் முன்பு, வைகை அணை சாலை சந்திப்பு, முருகன் தியேட்டர் அருகே என 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மகாராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் வைரமுத்து, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேனி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில், கம்பத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கம்பம் நகர செயலாளர் துரை நெப்போலியன், தலைமை கழக செயற்குழு உறுப்பினர் குருஇளங்கோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வு குறித்து வீதி, வீதியாக துண்டுபிரசுரங்களை தி.மு.க.வினர் வினியோகம் செய்தனர்.

இதேபோல் போடி முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். லட்சுமணன் தலைமையில், அவரது வீட்டருகே தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனி மனித இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதேபோல் பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் தி.மு.க.வினர் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, கைகளில் கருப்புக்கொடியை ஏந்தி வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டியில் மாநில தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாண்டியன், எண்டப்புளி ஊராட்சிமன்ற தலைவர் சின்னபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சருத்துப்பட்டி ஊராட்சியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கண்ணையன் தலைமையிலும், கீழவடகரை ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் செல்வராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story