பெண் அடித்துக்கொலை: கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது


பெண் அடித்துக்கொலை: கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 July 2020 5:58 AM IST (Updated: 23 July 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள போந்தவாக்கத்தில் இருங்குளம் காப்பு காடு உள்ளது. இந்த காட்டு பகுதியில் கடந்த 18-ந் தேதி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அழுகிய நிலையில் பாதிரிவேடு போலீசார் கைப்பற்றினர்.

மேலும், இந்த கொலை தொடர்பாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தார். இந்தநிலையில், சம்பவ இடத்தில் இருந்து அந்த பெண்ணின் செல்போன் கைப்பற்றப்பட்டது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் கும்மிடிப்பூண்டி அடுத்த காட்டு அப்பாவரம் கிராமத்தை சேர்ந்த திவ்யா (வயது 26) என்பது தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த திவ்யா, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் மாயமானதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, அவருக்கு வந்த செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஆரம்பாக்கம் அடுத்த தோக்கம்பூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(34) மற்றும் அவரது உறவினரான பாபு (45) ஆகிய 2 பேரை பாதிரிவேடு போலீசார் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர்.

அதில், கொலை செய்யப்பட்ட பெண் திவ்யாவிற்கும் வெங்கடேசனுக்கும், கடந்த 1 வருடமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வெங்கடேசனிடம் திவ்யா அடிக்கடி வற்புறுத்தி வந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 14-ந் தேதி வெங்கடேசனும், அவரது உறவினரான பாபுவும் திவ்யாவை ஒரே மோட்டார் சைக்கிளில் அமர வைத்து இருங்குளம் காப்பு காட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து, 2 பேருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முற்றியதில் வெங்கடேசனும், பாபுவும் சேர்ந்து திவ்யாவின் தலையில் கல்லை போட்டு தாக்கி அவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இதனையடுத்து காப்பு காட்டில் கல்லால் தாக்கி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் வெங்கடேசன், பாபு ஆகிய 2 பேரையும் பாதிரிவேடு போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

Next Story