மன்னார்குடியில், நள்ளிரவில் தீவிபத்து 4 கடைகள்-2 வீடுகள் எரிந்து சாம்பல் - ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்


மன்னார்குடியில், நள்ளிரவில் தீவிபத்து 4 கடைகள்-2 வீடுகள் எரிந்து சாம்பல் - ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 23 July 2020 3:45 AM IST (Updated: 23 July 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 4 கடைகள்-2 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திருப்பாற்கடல் குளம் அருகே காந்தி ரோடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மள மளவென அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளுக்கும் பரவியது. இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மன்னார்குடி, கூத்தாநல்லூர், கோட்டூர், நீடாமங்கலம் ஆகிய ஊர்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் சர்புதீன் என்பவருக்கு சொந்தமான டீக்கடை, சுமதி என்பவருக்கு சொந்தமான தையல் கடை, ஜெயமேரி, மனோகர் ஆகியோரின் கூரை வீடுகள், மணிமாறன் என்பவரின் மோட்டர் சைக்கிள் குடோன், ரவி என்பவரின் மோட்டார் சைக்கிள் ஒர்க் ஷாப் ஆகியவை எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி ஆகியவற்றை மண்டல துணை தாசில்தார் செந்தில், கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் ஆகியோர் நேற்று காலை நேரில் சென்று வழங்கினர்.

மேலும் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினர். இதேபோல அ.தி.மு.க. சார்பில் நகராட்சி முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், டாக்டர் இன்பன் ஆகியோர் நிவாரண உதவிகள் வழங்கினர்.
1 More update

Next Story