கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பலி

கன்னியாகுமரி அருகே கடலில் படகு கவிழ்ந்து மீனவர் பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே கே.எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது 65), மீனவர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ, சிலுவைதாஸ், சுமித் ஆகியோரும் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ரெமிஜியுஸ் என்பவருக்கு சொந்தமான வள்ளத்தில் மீன்பிடிக்க சென்றனர்.
ஏற்கனவே கடந்த 2 நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டது. நேற்று அதிகாலையிலும் கடல் சீற்றமாக இருந்தது. ராட்சத அலைகள் எழும்பி வந்தன. அந்தோணி சென்ற வள்ளம், ராட்சத அலையில் சிக்கி தள்ளாடியபடி கவிழ்ந்தது. இதில் அந்தோணி மட்டும் கடலுக்குள் தவறி விழுந்தார்.
மற்றவர்கள் படகை பிடித்துக் கொண்டனர். பின்னர் அந்தோணியை, அவருடன் சென்றவர்கள் விடிய விடிய தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக கோவளம் பங்குதந்தை பிரபுதாஸிடம் கூறினர்.
அவர், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், சுடலைமணி மற்றும் சுப்பிரமணி, சுபாஷ் ஆகியோர் அதிநவீன ரோந்து படகு மூலம் அந்தோணியை தேடினர். இறுதியில் நேற்று மாலை 6 மணியளவில் கோவளம் அருகே சவுக்குதோப்பு பகுதியில் அந்தோணியின் உடல் கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story