கெயில் குழாய்கள் பதிக்கும் பணியை வேளாண்மை துறையினர் கண்காணிக்க வேண்டும் - ராமலிங்கம் எம்.பி. பேட்டி

கெயில் குழாய்கள் பதிக்கும் பணியை வேளாண்மை துறையினர் கண்காணிக்க வேண்டும் என்று ராமலிங்கம் எம்.பி. கூறினார்.
பொறையாறு,
நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கெயில் நிறுவன கட்டுப்பாட்டு நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது கெயில் நிறுவனம் சீர்காழி தாலுகா மாதானம் முதல் மேமாத்தூர் வரை 29 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக எரிவாயு குழாய்களை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்கள் வழியாக பதித்து வருகிறது. இதன் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் மேமாத்தூரில் உள்ள கெயில் நிறுவனத்தின் கட்டுப்பாடு நிலையம் அருகே ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த குழாயில் இருந்து திடீரென 15 அடி உயரத்திற்கு மேல் பயங்கர சத்தம் மற்றும் புழுதியுடன் காற்று வெளியேறியது. இதனை நேரில் பார்த்த அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கியாஸ் கசிவு ஏற்பட்டு விட்டதாக அச்சமடைந்தனர்.
இந்தநிலையில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நிறைவு பெறாததால் குழாய்களில் இன்னும் கியாஸ் நிரப்பப்படவில்லை என கெயில் நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
தகவல் அறிந்த மயிலாடுதுறை ராமலிங்கம் எம்.பி. நேற்று மேமாத்தூர் கிராமத்திற்கு வந்து காற்று வெளியேறிய இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கெயில் நிறுவனத்தின் மூலமாக இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாய் போடப்பட்டுள்ளது. இந்த குழாயிலிருந்து 15 அடி உயரத்திற்கு வாயு தண்ணீர் மற்றும் சேறும், சகதியும் பீய்ச்சி அடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்ததை கேள்விப்பட்டு இதனை பார்வையிட வந்தோம். கெயில் நிறுவனம் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவே குடியிருப்பு பகுதியாக இருந்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் கெயில் நிறுவனம் எதிர்காலத்தில் உரிய பாதுகாப்புடன் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கெயில் குழாய்கள் பதிக்கும் பணியை வேளாண்மை துறையினர் கண்காணித்து அந்த நிறுவனத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நிவேதா முருகன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய பொறுப்பாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், மாவட்ட தொழில் நுட்ப அணி செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story