நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் திடீர் தீ: பல லட்சம் ரூபாய் நோட்டுகள் அதிர்ஷ்டவசமாக தப்பியது


நெல்லை புதிய பஸ் நிலையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் திடீர் தீ: பல லட்சம் ரூபாய் நோட்டுகள் அதிர்ஷ்டவசமாக தப்பியது
x
தினத்தந்தி 25 July 2020 4:00 AM IST (Updated: 25 July 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பல லட்சம் ரூபாய் நோட்டுகள் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

நெல்லை,

நெல்லை புதிய பஸ் நிலைய வளாகத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் அருகில் அடுத்தடுத்து 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இதில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் இருந்து நேற்று காலை திடீரென்று புகை வந்தது. சிறிது நேரத்தில் ஏ.டி.எம். எந்திரம் தீப்பிடித்து எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். முற்றிலும் தீ அணைக்கப்பட்டதால் அருகில் இருந்த மற்றொரு ஏ.டி.எம். மையத்துக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் ஏ.டி.எம். மையம் மற்றும் அங்கிருந்த குளிர்சாதன எந்திரம் தீயில் கருகி நாசமானது. மேலும், அங்குள்ள பணம் போடும் மற்றும் பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரங்களும் சுற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. அதே நேரத்தில் அதற்குள் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் நோட்டுகள் அதிர்ஷ்டவசமாக தீயில் கருகாமல் தப்பியதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் ஓடாவிட்டாலும், அங்கு தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், கடை ஊழியர்கள் மற்றும் பணம் எடுக்க பொதுமக்கள் அவ்வப்போது வந்து செல்வது உண்டு. அங்கு ஏ.டி.எம். எந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story