சட்டசபையில் கவர்னர் உரை அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு


சட்டசபையில் கவர்னர் உரை அமைச்சர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 24 July 2020 11:58 PM GMT (Updated: 24 July 2020 11:58 PM GMT)

புதுச்சேரி சட்டசபையில் கவர்னர் கிரண்பெடி நேற்று உரையாற்றினார். இதை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் மற்றும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி, கவர்னருக்கும் அமைச்சரவைக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் நலத் திட்டப்பணிகள் முடங்கின. தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரிலும் மோதல் எதிரொலித்தது. நீண்ட இழுபறிக்குப் பின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த 20-ந் தேதி கவர்னர் உரையுடன் பட்ஜெட் தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பட்ஜெட் தன்னிடம் வராததால் சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்ற முடியாது என்று கவர்னர் தெரிவித்துவிட் டார். இதன் காரணமாக கடந்த 20-ந் தேதி கவர்னர் உரை இடம் பெறாமலேயே பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் துறை ரீதியான மானிய கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படாததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து பட்ஜெட்டுக்கு பின் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இத்தகைய சூழலில் துறை ரீதியான மானிய கோரிக்கைகளுக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்தார். சட்டசபையில் உரையாற்ற வருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி நேற்று காலை சட்டசபைக்கு உரையாற்ற கவர்னர் கிரண்பெடி வந் தார். அவரை சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று சபைக்கு அழைத்து வந்தனர். நேராக சபாநாயகர் இருக்கைக்கு வந்த கவர்னர் கிரண்பெடி தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தார். காலை 9:30 மணிக்கு தொடங்கிய அவர் 10.45 மணிக்கு முடித்துக்கொண்டார். அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து சுருக்கமாக படித்தார். அதன்பின் 11 மணி அளவில் கவர்னர் கிரண்பெடி சட்டசபையில் இருந்து கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

நேற்றைய கூட்டத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் கவர்னர் உரையை புறக்கணித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க. பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Next Story