பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்


பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2020 3:27 AM IST (Updated: 27 July 2020 3:27 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை அரசு பொதுப் பணித்துறையில் 1,311 வவுச்சர் ஊழியர்கள் உள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் தினக் கூலியாக ரூ.200 வீதம் மாதத்தில் 16 நாட்கள் அவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பொதுப் பணித்துறை அரசுப்பணியாளர்கள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, மத்திய அரசு வழிகாட்டுதலின்படி நாளொன்றுக்கு ரூ.600 ஆக சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல பிரிவுகளில் வவுச்சர் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடும்பத்துடன் போராட்டம்

இந்தநிலையில் நேற்று காலை மறைமலையடிகள் சாலை சுதேசி மில் அருகே பொதுப்பணித்துறை அரசு பணியாளர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் ஆறுமுகம், குமாரராஜா, தேவ நாதன், அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடும்பம் குடும்பமாக வந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கிழக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

கொட்டும் மழையில்...

இதனைத்தொடர்ந்து சப்-கலெக்டர் சுதாகர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவரது சமாதானத்தையும் ஏற்க மறுத்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடப் போவதாக கூறி போராட்டத்தை கைவிட மறுத்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த உருளையன்பேட்டை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லும்படி அவர்களை அறிவுறுத்தினர். ஆனாலும் போராட்டத்தை தொடர்ந்ததால் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கரிக்குடோனில் அடைத்து வைக்கப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து போக மறுத்து தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பொதுப் பணித்துறை வவுச்சர் ஊழியர்களில் மற்றொரு பிரிவினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி நின்று நேற்று மாலை 6 மணி முதல் போராட்டம் நடத்தினார்கள். இதுபற்றி அறிந்தவுடன் வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.

Next Story