நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த இளம்பெண் பலி


நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறி விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த இளம்பெண் பலி
x
தினத்தந்தி 27 July 2020 4:09 AM IST (Updated: 27 July 2020 4:09 AM IST)
t-max-icont-min-icon

பெரியபாளையம் அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலைத்தடுமாறியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த இளம்பெண் கணவர் கண் முன் பரிதாபமாக பலியானார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. விவசாயி. இவர் தனது மகள் மீராவை (வயது 24), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கண்ணன் (28) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். மீரா-கண்ணன் தம்பதியினருக்கு லத்தீஸ்வரன், கவீன் என 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று கண்ணன் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஆத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பெரியபாளையம் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அரியபாக்கம் காலனி அருகே வந்தபோது, திடீரென நாய் ஒன்று வாகனத்தின் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி நாய் மீது மோதியதில் சாலையோரம் கவிழ்ந்தது.

பெண் பலி

இந்த விபத்தில் 4 பேரும் கீழே விழுந்ததில், மீராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பெரியபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து தகவலறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் விரைந்து வந்து மீராவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாமனார் வீட்டுக்கு வந்தபோது கணவர் கண்முன்னே மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story