அயோத்தியில் ஏற்பாடுகள் தீவிரம் ராமர் கோவில் பூமி பூஜைக்கு உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு இல்லை


அயோத்தியில் ஏற்பாடுகள் தீவிரம் ராமர் கோவில் பூமி பூஜைக்கு உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு இல்லை
x
தினத்தந்தி 28 July 2020 1:58 AM IST (Updated: 28 July 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

அயோத்தி,

ராமபிரான் பிறந்த இடமான அயோத்தியில் கோவில் கட்டுவதற்கு ஆண்டுக்கணக்கில் நடந்த சட்ட போராட்டங்கள் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தன. அங்கு கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து இதற்கான பணிகளை விசுவ இந்து பரி ஷத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது. ராமர் கோவில் கட்டுமான பணிகளை தொடங்க இந்த அறக்கட்டளை மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

பிரதமருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்

அயோத்தியில் பிரமாண்டமாக அமைய உள்ள ராமர் கோவிலுக்கு வருகிற 5-ந்தேதி பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது. கோலாகலமாக நடைபெற உள்ள இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

மிகவும் சிறப்பாக நடைபெற உள்ள இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் பிரதமருடன் பங்கேற்கிறார். பிரதமரும், ஆர்.எஸ்.எஸ். தலைவரும் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

200 பேருக்கு அழைப்பு

உலகம் முழுவதும் உள்ள இந்துக்களின் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ள இந்த நிகழ்வில் பங்கேற்க பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 268 பேருக்கு அழைப்பு அனுப்ப ராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் கொரோனா காரணமாக 200 பேரை மட்டுமே அழைக்க முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வலியுறுத்தி உள்ளார். எனவே 4 பிரிவுகளில் மொத்தம் 200 பேர் அழைக்கப்பட உள்ளனர்.

அதன்படி சாதுக்கள்-டிரஸ்ட் உறுப்பினர்கள், விசுவ இந்து பரி ஷத்-ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 4 பிரிவுகளில் அழைப்பிதழ் அனுப்பப்படுகிறது. இதில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோ ஷி, உமா பாரதி, சாத்வி ரிதம்பரா, வினய் கட்டியார், ராம்விலாஸ் வேதாந்தி உள்ளிட்டோர் அழைக்கப்படுகின்றனர்.

பா.ஜனதா முதல்-மந்திரிகள்

மேலும் பா.ஜனதா முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. இதைப்போல முக்கிய பிரமுகர்கள் என்ற அடிப்படையில் நாட்டின் முக்கிய தொழிலதிபர்களுக்கு அழைப்பு அனுப்பப்படுகிறது. அதன்படி அம்பானி, அதானி உள்ளிட்டோர் அழைக்கப்படுவார்கள் என அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரம் பா.ஜனதா அல்லாத பிற கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை என டிரஸ்ட் வட்டாரங்கள் தெரிவித்தன. அந்தவகையில் சிவசேனா தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு அனுப்பப்படாது என தெரிகிறது. முன்பு உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ராமர் கோவிலுக்காக போராடிய கட்சிகளில் சிவசேனாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்பாடுகள் தீவிரம்

இதற்கிடையே ராமர் கோவில் பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கோவில் அமையும் இடத்தை சுற்றியுள்ள சுவர்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களால் மெருகூட்டப்படுகின்றன. அயோத்தி நகரமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார். கடந்த 24-ந்தேதி அயோத்தி சென்ற அவர், அங்கு நடந்து வரும் ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘சுமார் 500 ஆண்டுகால போராட்டத்துக்குப்பின் நடைபெறும் மிகச்சிறப்பான இந்த நிகழ்வை தீபாவளி போல கொண்டாட வேண்டும்’ என தெரிவித்தார்.

இதைப்போல பூமி பூஜைக்கு முந்தைய நாளில் அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி இந்த நிகழ்வை கொண்டாட வேண்டும் என விசுவ இந்து பரி ஷத் அமைப்பினரும், சாதுக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story