மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 July 2020 3:19 AM IST (Updated: 28 July 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளை பாதிக்கச் செய்யும் மத்திய அரசின் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி காரைக்கால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால்,

விவசாயிகளை பாதிக்கச் செய்யும் மத்திய அரசின் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி காரைக்கால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி விவசாயிகள் சங்க செயலாளர் புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் மதியழகன், துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. பொறுப்பாளர் சங்கர், விவசாய அணி அமைப்பாளர் குமார் மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாயிகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் விளை பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் போன்ற சட்டங்கள் அனைத்தும், உண்மையான விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாமல், கார்பரேட் நிறுவனங்கள் லாபமடையும் வகையில் உள்ளது. எனவே இந்த சட்டங்களை மத்திய அரசு உடனே ரத்து செய்யவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகளுக்காக வீடு, கட்சி அலுவலகம் மற்றும் பொது இடங்களில் கருப்புக் கொடி ஏற்றி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் பாகூரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முத்துலிங்கம், ராஜா ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாகூர்-நெட்டப்பாக்கம் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாகூர் தொகுதி செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் பத்மநாபன், ராமசாமி, சரவணன், செல்வராசு, ஹரிதாஸ், சிவப்பிரகாசம் உள்பட பலர் சமூக இடைவெளியை கடைபிடித்து, கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Next Story