மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்


மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 27 July 2020 9:57 PM GMT (Updated: 27 July 2020 9:57 PM GMT)

புதுவை பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் வவுச்சர் ஊழியர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் புதுச்சேரி சுதேசி மில் அருகில் பொதுப் பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் நேற்று முன்தினம் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் சப்-கலெக்டர் சுதாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் நேற்று முன்தினம் மாலை விடுவிக்கப்பட்டனர்.

2-வது நாளாக போராட்டம்

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ. எதிரே உள்ள 50 அடி உயர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மேலேயே தங்கினார்கள். நேற்று 2-வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது. அவர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசுக்கு எதிராகவும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் வவுச்சர் ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் குடிநீர் தொட்டி அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி பொதுப் பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் போராட்டம் நேற்று நள்ளிரவு வரை நீடித்தது. இந்தநிலையில் பொதுப் பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் போராட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Next Story