நீலகிரியில் பிளஸ்-2 மறுதேர்வை 2 பேர் எழுதினர் 13 பேர் வரவில்லை


நீலகிரியில் பிளஸ்-2 மறுதேர்வை 2 பேர் எழுதினர்   13 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 28 July 2020 4:28 AM IST (Updated: 28 July 2020 4:28 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் பிளஸ்-2 மறு தேர்வை 2 பேர் எழுதினர். 13 பேர் வரவில்லை.

ஊட்டி,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள் நடந்த வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகளில் சிலர் பங்கு பெற முடியவில்லை என்று கூறப்பட்டது. தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன் கருதி மறுதேர்வு நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இறுதி நாள் தேர்வை எழுதாதவர்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

இதில், தனித்தேர்வர்கள் 20 பேர் எழுதவில்லை. இந்த நிலையில் நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வில் விடுபட்டவர்களுக்கு மறு தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்காக நீலகிரி மாவட்டம் குன்னூர் கல்வி மாவட்டத்தில் 2 தேர்வு மையங்கள், கூடலூர் கல்வி மாவட்டத்தில் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 20 பேரில் 5 பேர் வெளிமாவட்டங்களில் வசித்து வருகின்றனர். ஊரடங்கால் திரும்பி வர முடியாததால் அந்தந்த பகுதிகளில் தேர்வு எழுத வழிவகை செய்யப்பட்டது.

13 பேர் வரவில்லை

இதையடுத்து தனித்தேர்வர்கள் 15 பேருக்கு நேற்று மறுதேர்வு நடந்தது. ஊட்டியில் இரண்டு தேர்வு மையங்களும், கூடலூரில் இரண்டு தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டு இருந்தது. கூடலூரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் 2 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். மீதமுள்ள மூன்று தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வரவில்லை. ஊட்டியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தனித்தேர்வர்கள் யாரேனும் வருகிறார்களா என்று காலை 10:30 மணி வரை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், யாரும் வரவில்லை. மொத்தம் 13 பேர் தேர்வு எழுதவில்லை.

Next Story