விழுப்புரம், விக்கிரவாண்டியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் ஆய்வு அதிக பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ பறிமுதல்
விழுப்புரம், விக்கிரவாண்டியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிலையில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை அவர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சி பகுதியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று கட்டுக்குள் வந்தபாடில்லை. தினந்தோறும் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி கடை மற்றும் கொரோனா பாதிக்கபட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, மக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடங்களில் தினசரி, காலை, மதியம், மாலை ஆகிய 3 வேளையும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும், கட்டுப்பாட்டு பகுதிக்குள் யாரையும் வரவிடாமலும், அங்கிருந்து யாரும் வெளியேற விடாமலும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அதிகரிகளிடம் அறிவுறுத்தினார்.
மேலும் கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர்களுக்கு அத்திவாசிய தேவைகள் நகராட்சி மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறதா? யாருக்காவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளனவா? என்று கண்டறியப்படுகிறதா என்பதையும் கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரேவதி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது விக்கிரவாண்டி கடைவீதிக்கு சென்ற அவர், அங்குள்ள கடைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா, முககவசம் அணிந்து வருகிறார்களா என்று பார்வையிட்டார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவில் அதிகம் பேர் பயணம் செய்தனர். இதை பார்த்த கலெக்டர் அண்ணாதுரை உடனடியாக அந்த ஆட்டோவை மறித்து டிரைவரை எச்சரிக்கை செய்ததுடன், ஆட்டோவை பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மருத்துவ முகாம்
மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கும் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு வரும் வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்தும் வகையில் தினசரி போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் பழைய போலீஸ் நிலையம் தெருவில் நடந்த மருத்துவ முகாமை பார்வையிட்ட கலெக்டர், அங்கு தனது உடல் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலமாக பரிசோதனை செய்து கொண்டார்.
ஆய்வின் போது சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில் குமார், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், தாசில்தார் பார்த்தீபன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், எழிலரசு, பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் உட்பட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story