பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக வவுச்சர் ஊழியர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி 3-வது நாளாக போராட்டம்


பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக வவுச்சர் ஊழியர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி 3-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 29 July 2020 2:51 AM IST (Updated: 29 July 2020 2:51 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் இரு பிரிவாக பிரிந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி நின்றும், வில்லியனூர் பை-பாஸ் சாலையில் மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 1,311 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் மாதத்திற்கு 16 நாட்கள் பணி வழங்கப்படுகிறது. தங்களுக்கு தினக்கூலி ஊழியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர்.

இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சுதேசி மில் அருகில் மறைமலை அடிகள் சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை மாலையில் விடுவித்தனர். அவர்களில் ஒரு பிரிவினர் மேட்டுப்பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அவர்களிடம் போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் அங்கிருந்தபடி முதல்-அமைச்சருடன் தொடர்பு கொண்ட பேசினார். அப்போது பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று முதல்-அமைச்சர் கூறினார்.

இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு வவுச்சர் ஊழியர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே இறங்கினர்.

சாலை மறியல்

இதற்கிடையே புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் பொதுப்பணித் துறை வவுச்சர் ஊழியர்கள் ஒருபிரிவினர் 100-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் அங்குவிரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற போராட்டத்துக்கு தடை அமலில் இருந்து வருகிறது. எனவே கலைந்து செல்லும்படி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் அறிவுறுத்தினார். இதனையடுத்து வவுச்சர் ஊழியர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வழக்குப்பதிவு

இதற்கிடையே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மீது போராட்டம் நடத்தியது குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் ரவிச்சந்திரன் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக தியாகராஜன், அனில் குமார் உள்பட 19 பேர் மீது மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முன்பு உள்ள சாலையில் போராட்டம் நடத்திய ஊழியர்கள் வீரமணி, தேவி உட்பட 16 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story