அசாமில் வெள்ளத்தால் பாதிப்பு: நீலகிரியில் பச்சை தேயிலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
நீலகிரியில் பச்சை தேயிலை விலை உயர்ந்து ள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலை விவசாயம் முக்கிய பொருளாதாரமாக விளங்குகிறது. இங்கு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் 60,000 பேர் உள்ளனர். தங்களது தோட்டங்களில் பச்சை தேயிலையை பறித்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு விவசாயிகள் வழங்கி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. சமூக இடைவெளியை கடைபிடித்து குறைந்த தொழிலாளர்களை கொண்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தது.
விலை உயர்வு
ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை விலை கிடைத்தது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதோடு, தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியை கொடுக்க முடியாமல் திணறி வந்தனர். பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே திடீரென பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.21 முதல் ரூ.30 வரை விலை உயர்ந்து உள்ளது. இதனால் நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து இந்திய தேயிலை வாரிய துணைத்தலைவர் குமரன் கூறியதாவது:-
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 1,350 மில்லியன் கிலோ தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 950 மில்லியன் கிலோ உள்நாட்டு தேவைக்காகவும், 260 மில்லியன் கிலோ தேயிலைத் தூள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. சமீபத்தில் அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் அங்கு விவசாயம் மற்றும் தேயிலை உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் உள்நாட்டில் தேயிலைத் தூள் தேவை அதிகமாக இருக்கிறது. ஒரு கிலோ தேயிலைத்தூள் ரூ.141-க்கு ஏலம் எடுக்கப்படுகிறது.
ஏற்றுமதி
இதனால் நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு விலை அதிகரித்து இருக்கிறது. கிரேடு அடிப்படையில் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.21 முதல் ரூ.30 வரை தேயிலை தொழிற்சாலைகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகிறது.
நீலகிரியில் ஒரு ஆண்டுக்கு 130 மில்லியன் கிலோ தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்தியாவிலிருந்து கென்யா நாட்டுக்கு மட்டும் தேயிலைத் தூள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்கோசர்வ் தொழிற்சாலைகள் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கு ரூ.16.50 விவசாயிகளுக்கு வழங்குமாறு தேயிலை வாரியம் அறிவித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
குன்னூர் ஏல மையம்
குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூளுக்கு விலை உயர்வு ஏற்பட்டதால், விவசாயிகள் பறிக்கும் பச்சை தேயிலைக்கும் விலை உயர்ந்துள்ளது. கடந்த 25-ந் தேதி பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் பச்சை தேயிலை விலை அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தேயிலை சிறு விவசாயி காளிதாஸ் கூறியதாவது:-
கடந்த 25-ந் தேதி பச்சை தேயிலைக்கு வார விலை நிர்ணயம் செய்யப்பட்டு சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதன்படி ‘ஏ‘ பிரிவு பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.31 முதல் ரூ.32 வரையிலும், ‘பி‘ பிளஸ் பிரிவு கிலோ ஒன்று ரூ.26 முதல் ரூ.27 வரையிலும், ‘பி‘ பிரிவு பச்சை தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.21 வரையும் வழங்கப்பட்டது. இது கடந்த வாரத்தை விட கிலோ ஒன்றுக்கு ரூ.1 வரை அதிகரித்துள்ளது. பச்சை தேயிலை விலை உயர்வு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தேயிலை விவசாயிகளின் நலன் கருதி இந்த விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் நிரந்தரமாக்க முன்வர வேண்டும். மேலும் கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்து, தேயிலை விவசாயிகளுக்கு மானிய விலையில் தேயிலை உரம் வழங்க அரசு முன் வரவேண்டும்.
Related Tags :
Next Story