மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது புதிய தொற்று-9,211; உயிரிழப்பு-298


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது புதிய தொற்று-9,211; உயிரிழப்பு-298
x
தினத்தந்தி 30 July 2020 2:54 AM IST (Updated: 30 July 2020 2:54 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது. நேற்று மட்டும் 298 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

நாட்டின் கொரோனா பாதிப்பில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களாக தலைநகர் மும்பையில் கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்தது. இதில் நேற்றுமுன்தினம் 700 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 1,118 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டது.

9,211 பேருக்கு தொற்று

மேலும் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின், மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரத்து 211 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை கடந்து உள்ளது.

இதுவரை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 651 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 298 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 60 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 463 ஆக உயர்ந்துள்ளது.

7,478 பேர் குணமடைந்தனர்

மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருபக்கம் அசுர வேகத்தில் அதிகரித்தாலும், மற்றொரு பக்கம் இந்த நோயில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதன்படி நேற்று மட்டும் 7 ஆயிரத்து 478 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்து 755 ஆக உள்ளது.

இதுவரை மாநிலத்தில் 20 லட்சத்து 16 ஆயிரத்து 234 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story