நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திருப்பம் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைதாவாரா? பாட்னா போலீசார் மும்பை வந்தனர்


நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திருப்பம் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைதாவாரா? பாட்னா போலீசார் மும்பை வந்தனர்
x
தினத்தந்தி 30 July 2020 3:11 AM IST (Updated: 30 July 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா சக்ரபோர்த்தி கைதாவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவரிடம் விசாரணை நடத்த பாட்னா போலீசார் மும்பை வந்தனர்.

மும்பை,

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான 34 வயது இளம் இந்தி நடிகர் சு ஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துயர சம்பவம் இந்திய சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். சினிமா குடும்ப பின்னணி இன்றி இந்தி திரையுலகில் நுழைந்து வளர்ந்து வந்த நேரத்தில் அவர் உயிரை மாய்த்து கொண்டார்.

40 பேரிடம் வாக்குமூலம்

வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தாலும் தனக்கு வந்த படவாய்ப்புகளை அவர்கள் தடுத்ததாலும் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என சுமார் 40 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்று உள்ளனர்.

இதில் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தியிடமும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். நடிகை கங்கனா ரணாவத்திடமும் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை

இதற்கு மத்தியில் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காதலி ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என ரசிகர்கள் பலர் வலைதளத்தில் வறுத்தெடுத்தனர்.

இதையடுத்து வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ரியா சக்ரபோர்த்தி உள்துறை மந்திரி அமித் ஷாக்கு கோரிக்கை வைத்தார். அப்போது தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

திடீர் திருப்பம்

இந்தநிலையில் திடீர் திருப்பமாக சு ஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்று சு ஷாந்த் சிங் தந்தை கே.கே.சிங் பீகார் மாநிலம் பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார். சு ஷாந்த் சிங் கிரடிட் கார்டை பயன்படுத்தி ரியா சக்ரபோர்த்தி பணம் எடுத்துள்ளார் என்றும், சு ஷாந்த் சிங் கணக்கில் இருந்து ரூ.15 கோடியை வேறு ஒரு கணக்குக்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவரது மும்பை பாந்திரா வீட்டுக்கு சென்ற நடிகை ரியா சக்ரபோர்த்தி பணம், ஏ.டி.எம். கார்டு, மடிக்கணினி உள்ளிட்ட பல உடைமைகளை அபகரித்து மிரட்டல் விடுத்ததாகவும், அவர் சுஷாந்த் சிங்கை தங்களது குடும்பத்திடம் இருந்து பிரிக்க முயன்றதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

ரியா சக்ரபோர்த்தியும் இன்னும் சிலரும் சேர்ந்து மன ரீதியாக அவருக்கு தொல்லை கொடுத்துள்ளனர் என்றும் அவரது புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வழக்குப்பதிவு

இதையடுத்து ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீசார் தற்கொலைக்கு தூண்டியது, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த 4 போலீசார் கொண்ட தனிப்படை மும்பை அனுப்பி வைக்கப்பட்டு, நேற்று அவர்கள் வந்து சேர்ந்தனர். ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்த மும்பை போலீசாரின் உதவியை நாடி உள்ளனர்.

இதனால் ரியா சக்ரபோர்த்தி கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

இதற்கு மத்தியில் நடிகை ரியா சக்ரபோர்த்தி நேற்று அவரது வக்கீல் சதீஷ் மனேஷிண்டே மூலம் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கை பாட்னாவில் இருந்து மும்பை போலீசுக்கு மாற்ற உத்தரவிட வேண்டும், மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் வரை கே.கே.சிங் கொடுத்த புகார் மீதான பாட்னா போலீசின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி சிக்கி இருப்பது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும், ‘பவித்ரா ரக் ஷா’ தொலைக்காட்சி தொடரில் அவருடன் இணைந்து நடித்தவருமான நடிகை அங்கிதா லோகாண்டே தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நீதி வென்றது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story