சமூக இடைவெளியை மறந்து சான்றிதழ்பெற தாலுகா அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள்


சமூக இடைவெளியை மறந்து சான்றிதழ்பெற தாலுகா அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள்
x
தினத்தந்தி 30 July 2020 4:00 AM IST (Updated: 30 July 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரியில் சேர சான்றிதழ் பெறுவதற்காக தாலுகா அலுவலகத்தில் மாணவர்கள் குவிந்து வருவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காரைக்கால்,

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதையடுத்து மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொண்ட மாணவர்கள் உயர் கல்வியில் சேருவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதற்கு சாதி, இருப்பிடம் சான்று தேவைப்படுவதால் அவற்றை பெறுவதற்காக மாணவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு படையெடுத்துள்ளனர்.

கொரோனா தடைக்காலம் அமலில் இருந்து வரும் நிலையில் இதுபோன்ற சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் விண்ணப்பங்களில் பழைய சான்றிதழ்களை பயன்படுத்தலாம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஆன்லைனில் மட்டுமே உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி விண்ணப்பிக்கும் போது பழைய சான்றிதழ்கள் கணினியில் பதிவேற்ற முடியவில்லை. இதனால் செய்வதறியாமல் தவிக்கும் மாணவர்கள் உடனடியாக புதிய சான்றிதழ்களை பெறுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சான்றிதழ் பெறுவதற்காக காரைக்கால் தாலுகா அலுவலகத்தில் ஏராளமான மாணவர்கள் தினமும் குவிந்து வருகின்றனர். சமூக இடைவெளியை மறந்து அவர்கள் கூட்டமாக சேருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் விண்ணப்ப முறையை எளிமைப்படுத்துமாறு அரசுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கலெக்டர் உத்தரவு

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா கூறியதாவது:-

புதுச்சேரியில் உயர் கல்விகளுக்கு விண்ணப்பிக்க சாதி, இருப்பிடம் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு தேவைப்படுவது உண்மை. ஏற்கனவே வாங்கி உள்ள பழைய சாதி, இருப்பிடம் சான்றிதழ்களை மாணவர் சேர்க்கைக்கு தற்போது பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே கொரோனா தொற்று நேரத்தில், புதிதாக சாதி, இருப்பிடம் சான்றுகள் பெறுவதற்காக தாசில்தார் அலுவலகத்துக்கு மாணவர்கள் வர தேவையில்லை.

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குப் பின் ஒருமாதம் கழித்து புதிதாக சான்றிதழ்களை பெற்று சமர்ப்பித்தால் போதும் என ஏற்கனவே கல்வித்துறை சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கையில் பிராந்திய அடிப்படையிலான இட ஒதுக்கீடு பெறுவதற்குரிய சான்றிதழ்களை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக, சில புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக தாசில்தார்கள், மேல்நிலைக்கல்வி துணை இயக்குனர் உள்ளிட்டோருக்கு தாமதமின்றி ஒரே நாளில் சான்றிதழ்களை வழங்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story