கார் விபத்தில் சென்னை டாக்டர் பலி 3 பேர் படுகாயம்


கார் விபத்தில் சென்னை டாக்டர் பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 July 2020 4:20 AM IST (Updated: 30 July 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

சாலை தடுப்பில் மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் சென்னையை சேர்ந்த டாக்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை,

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ் (வயது 40). அதே பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வந்த இவர், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை அருகே பைபாஸ் சாலையில் பங்குதாரராக மற்றொரு ஆஸ்பத்திரியையும் நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு தனது நண்பர்களான விருகம்பாக்கத்தை சேர்ந்த கிஷோர் (31), வடபழனியை சேர்ந்த பிரபு (30), பெரம்பூரை சேர்ந்த கிரண் (34) ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காரை கிஷோர் ஓட்டினார். முன் இருக்கையில் டாக்டர் பிரகாஷ் அமர்ந்து இருந்தார். மற்ற 2 பேர் காரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தனர்.

கார் கவிழ்ந்து பலி

கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டை அடுத்த புதுரோடு என்ற பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பின் மீது மோதி நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டாக்டர் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

3 பேர் படுகாயம்

கார் விபத்தில் பலியான டாக்டர் பிரகாசுக்கு திருமணமாகி அஞ்சு மகாலட்சுமி (35) என்ற மனைவியும், கவின் (12) என்ற மகனும், கயல் (9) என்ற மகளும் உள்ளனர். படுகாயம் அடைந்த அவரது நண்பர்கள் 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story