கொரோனாவால் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு; முடங்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்


கொரோனாவால் விநாயகர் சதுர்த்தி கட்டுப்பாடு; முடங்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்
x
தினத்தந்தி 30 July 2020 10:13 PM GMT (Updated: 30 July 2020 10:13 PM GMT)

மும்பையில் விநாயகர் சதுர்த்தி என்றாலே கண்இமைக்கும் நேரத்தில் நினைவுக்கு வருவது வீதியெங்கும் பல அடி உயரங்களில் நிறுவப்படும் விதவிதமான, வண்ணமயமான விநாயகர் சிலைகள் தான்.

மும்பை,

பிரமாண்டமான பந்தல்கள் அமைத்தும், மின்விளக்கு அலங்காரங்களில் ஜொலிக்க விட்டும், விநாயகர் மண்டல்களில் 10 நாட்கள் வரை விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டும். சர்வஜனிக் மண்டல்கள் தவிர வீடுகளிலும் லட்சக்கணக்கில் மக்கள் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடுவார்கள்.

மும்பை நகரமே உற்சாக வெள்ளத்தில் திளைக்கும். இந்த ஆண்டு வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தொடங்குகிறது.

ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் இப்படி ஒரு சிக்கலை எதிர்கொள்ளும் என யாரும் எண்ணியிருக்க மாட்டார்கள்.

வாழ்வாதாரம் பாதிப்பு

உலக நாடுகளை எல்லாம் தனது கோரப்பிடியால் இறுக்கி வரும் கொரோனா வைரஸ் எல்லா பண்டிகைகளையும் முடக்கி போட்டு விட்டது. மும்பையில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்த கொரோனா விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்து விட்டது.

விநாயகர் சதுர்த்தியை மிகவும் எளிமையான முறையில் கொண்டாட வேண்டும் என கட்டுப்பாடுகள் மாநில அரசால் விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக விநாயகர் சிலைகளில் இந்த ஆண்டு பிரமாண்டத்தை எதிர்பார்க்க முடியாது. 4 அடி உயரத்தில் தான் சிலைகளை நிறுவ அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ரூ.70 கோடி

இதனால் ஆண்டுதோறும் ரூ.70 கோடிக்கும் அதிகமான அளவுக்கு வருவாய் ஈட்டும் இந்த பண்டிகையை சார்ந்திருக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் மூலம் அரசுக்கும் வரி வருவாய் கிடைக்கும். கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பிரமாண்ட சிலை வடிவமைப்பாளர்களும், விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர அலங்கார பொருட்கள் தயாரிப்பாளர்கள், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக மண்டங்களை அமைப்பவர்கள், போக்குவரத்து வசதிகளை வழங்குவர்கள், கைவினை கலைஞர்கள், பூ விற்பனையாளர்கள் என பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அச்சத்தில் உள்ளது.

Next Story