முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றம்? பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பதில்


முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றம்? பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் பதில்
x
தினத்தந்தி 31 July 2020 4:02 AM IST (Updated: 31 July 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவாரா என்பது குறித்த கேள்விக்கு நளின்குமார் கட்டீல் பதிலளித்துள்ளார்.

ஹாசன்,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துணை முதல்-மந்திரியாக உள்ள லட்சுமண் சவதி நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலை லட்சுமண் சவதி ஏற்கனவே மறுத்திருந்தார். இந்த நிலையில் இந்த தகவலை மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீலும் மறுத்துள்ளார்.

இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் ஹாசனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா மாற்றப்படுகிறார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் தவறானது. எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு எடியூரப்பாவே முதல்-மந்திரியாக நீடிப்பார். எங்கள் கட்சியில் யாரும் முதல்-மந்திரி பதவியை பெற முயற்சி செய்யவில்லை. இது தொடர்பாக வெளியான செய்திகள் அனைத்தும் ஊடகங்களால் உருவாக்கப்பட்டவை.

சகித்துக்கொள்ள மாட்டோம்

எங்கள் கட்சியை சேர்ந்த மந்திரிகளோ அல்லது எம்.எல்.ஏ.க்களோ யாரும் முதல்-மந்திரி மாற்றம் குறித்து பேசவில்லை. எங்கள் கட்சியில் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு உள்ளது. அதை அனைவரும் சரியான முறையில் பின்பற்றுகிறார்கள். கட்சியின் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். டெல்லிக்கு சென்றது குறித்து லட்சுமண் சவதியே தெளிவுபடுத்தியுள்ளார். தனது துறை தொடர்பான பணிகளுக்காக மத்திய மந்திரிகளை அவர் சந்தித்து பேசினார். அதனால் அவரது டெல்லி பயணத்திற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டாம். மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் அதை மாற்றி அமைப்பது குறித்து முதல்-மந்திரி முடிவு எடுப்பார். இது முதல்-மந்திரிக்கு இருக்கும் அதிகாரம். யாரை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும் என்பதை முதல்-மந்திரியே முடிவு செய்வார்.

டாக்டர்கள் பற்றாக்குறை

நாட்டை 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சரியான முறையில் டாக்டர்களை கூட நியமனம் செய்யவில்லை. ஆனால் காங்கிரசார் எங்கள் கட்சியின் ஆட்சி நிர்வாகத்தை குறை கூறுகிறார்கள். டாக்டர்கள் பற்றாக்குறை பிரச்சினைக்கு பா.ஜனதாவை குறை சொல்ல காங்கிரசுக்கு தார்மீக உரிமை இல்லை.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.

Next Story