தியாகிகள் நினைவிடத்தில் தொழிற்சங்கத்தினர் அஞ்சலி


தியாகிகள் நினைவிடத்தில் தொழிற்சங்கத்தினர் அஞ்சலி
x
தினத்தந்தி 31 July 2020 4:34 AM IST (Updated: 31 July 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

தியாகிகள் நினைவிடத்தில் தொழிற்சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

புதுச்சேரி,

1936-ம் ஆண்டு ஜூலை 30-ந் தேதி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பஞ்சாலை தொழிலாளர்களை அடக்க பிரெஞ்சு ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 12 தொழிலாளர்கள் மரணமடைந்தனர். மக்கள் தலைவர் சுப்பையா தலைமையில் நடந்த போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து எழுந்த ஆதரவு அலை பிரெஞ்சு அரசை பணிய வைத்தது.

அதன்பயனாக ஆசியாவிலேயே முதல் முறையாக புதுச்சேரியில் தான் 8 மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட உரிமைகள் பெறப்பட்டன. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 30-ந் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அஞ்சலி

இதனை முன்னிட்டு கடலூர் சாலை சிங்காரவேலர் சிலை அருகில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பஞ்சாலை தொழிற்சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் அபிஷேகம் உறுதிமொழி வாசிக்க தொழிலாளர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

முன்னாள் அமைச்சர் விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், தேசிய குழு உறுப்பினர் ராமமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சுதேசி மில் அருகில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.

சி.ஐ.டி.யு.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சார்பில் தியாகிகள் நினைவு சின்னத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யு. சீனிவாசன், மாநில குழு உறுப்பினர் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story