முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஆஜராக சிறப்பு மூத்த வக்கீலாக ஏ.எல்.சோமயாஜி நியமனம் தமிழக அரசு உத்தரவு


முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஆஜராக சிறப்பு மூத்த வக்கீலாக ஏ.எல்.சோமயாஜி நியமனம் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 31 July 2020 4:49 AM IST (Updated: 31 July 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தமிழக அரசு சார்பில் ஆஜராக சிறப்பு மூத்த வக்கீலாக ஏ.எல்.சோமயாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் மூத்த வக்கீலாக இருப்பவர் ஏ.எல்.சோமயாஜி. இவர், ஏற்கனவே 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும், 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அட்வகேட் ஜெனரலாகவும் பதவி வகித்தவர். இந்தநிலையில், இவரை தமிழக அரசின் சிறப்பு மூத்த வக்கீலாக நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதாவது முக்கியத்துவம் வாய்ந்த, சட்ட சிக்கலான தன்மையுடைய வழக்குகளில் இவர் தமிழக அரசு சார்பில் ஆஜராக இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டு உள்ளது.

இவருக்கு அட்வகேட் ஜெனரலுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும். இதற்கான உத்தரவை தமிழக கவர்னரின் ஒப்புதலுடன், தமிழக அரசின் பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் பிறப்பித்துள்ளார்.

விதிகள் கமிட்டி செயலாளர்

தமிழக அரசின் சிறப்பு மூத்த வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எல்.சோமயாஜியின் பெற்றோர் அய்யாலு, ஆவுடைதாய் ஆவார். இவருக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி என்றாலும், வளர்ந்தது தூத்துக்குடி. அங்குள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியிலும், வ.உ.சி. கல்லூரியிலும் படித்தார். சட்டப்படிப்பை திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் முடித்தார். பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்து, ‘ஐய்யர் அண்டு டோலியா’ வக்கீல் அலுவலகத்தில் ஜூனியராக சேர்ந்தார்.

இவரை 1995-ம் ஆண்டு மூத்த வக்கீலாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்தது. ஏராளமான சட்டப்புத்தகங்களை எழுதியுள்ள இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட்டின் விதிகள் உருவாக்கும் கமிட்டியின் செயலாளராக இருந்து வருகிறார்.

Next Story