திருவள்ளூர் அருகே தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் தொழிலாளர்கள் போராட்டம்


திருவள்ளூர் அருகே தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 31 July 2020 12:00 AM GMT (Updated: 31 July 2020 12:00 AM GMT)

திருவள்ளூரில் மீண்டும் பணிவழங்க கோரி தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு நிறுவனத்திற்கு கைமாறியதாக தெரிகிறது. புதிய நிர்வாகத்தினர் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணியில் இருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்ககோரி தொழிற்சாலை முன்பு நேற்று 2-வது நாளாக தங்கள் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாருடன் தள்ளுமுள்ளு

அப்போது அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் கலைந்து செல்ல மறுத்ததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் போலீசாரை கண்டித்து தொழிற்சாலையை முன்பு சாலையில் படுத்து புரண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து, அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story