திருட்டு, கொள்ளை வழக்குகளில் நீண்ட நாட்களாக தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை


திருட்டு, கொள்ளை வழக்குகளில் நீண்ட நாட்களாக தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை
x
தினத்தந்தி 31 July 2020 6:15 AM IST (Updated: 31 July 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு, கொள்ளை வழக்குகளில் நீண்ட நாட்களாக தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நீண்ட நாட்களாக கண்டுபிடிக்காத திருட்டு, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளின் நிலை, அவற்றை கண்டுபிடிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டுகளுடன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தனிப்படை அமைக்க...

திருட்டு, கொள்ளை வழக்குகளில் நீண்ட நாட்களாக தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் மாவட்டத்தில் ரவுடித்தனம் மற்றும் கும்பல் ரவுடித்தனம் செய்பவர்களை கண்காணிக்க வேண்டும். கஞ்சா மற்றும் எவ்வித போதைப்பொருள் விற்பனை, கடத்தல் போன்றவற்றை அடியோடு ஒழிக்க வேண்டும்.

சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணமும், போலீசின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டும். போலீஸ் நிலைய செயல்பாடுகள் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அனைத்து போலீஸ் நிலையங்களின் செயல்பாடுகளையும் அவ்வப்போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வரும் 42 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு கூட்டம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் செல்வன், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பேசியதாவது:-

சப்-இன்ஸ்பெக்டர்கள் பொதுமக்களோடு இணைந்து களப்பணியாற்றுகிறீர்கள். நீங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வு அடிப்படையில் பணி மாறுதல் வழங்கப்படும். ஆகையால் நீங்கள் சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும். நீங்கள் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள் என்று பொதுமக்களிடம் இருந்து பாராட்டுகள் வர வேண்டும். அதற்காக தவறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் எவ்வித காலதாமதமும் இருக்க கூடாது. பொதுமக்களிடம் இருந்து வரக்கூடிய மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ்(தூத்துக்குடி), சுரேஷ்(ஸ்ரீவைகுண்டம்), பாரத்(திருச்செந்தூர்), நாகராஜன்(சாத்தான்குளம்), கலைக்கதிரவன்(கோவில்பட்டி), சங்கர்(மணியாச்சி), பழனிக்குமார்(சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) மற்றும் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர்(மாவட்ட குற்றப்பிரிவு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story