ஆடுகளை வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த வியாபாரிகள்


ஆடுகளை வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த வியாபாரிகள்
x
தினத்தந்தி 31 July 2020 6:29 AM IST (Updated: 31 July 2020 6:29 AM IST)
t-max-icont-min-icon

ஆடுகளை வாங்க சமூக இடைவெளியின்றி குவிந்த வியாபாரிகள்.

வேலூர்,

வேலூர் மக்கான் பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக ஆட்டுசந்தைக்கு குறைந்த அளவு வியாபாரிகளே வருகை தந்தனர். மேலும் வியாபாரிகள் சமூக இடைவெளியை பின்பற்றி ஆடுகளை விற்பனை செய்தார்கள்.

இந்த நிலையில் மக்கான் பகுதியில் நாளை (1-ந் தேதி) பக்ரீத் பண்டிகை என்பதால் சிறப்பு ஆட்டு சந்தை நேற்று நடந்தது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தனர். வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வாகனங்களில் ஆடுகளை கொண்டு வந்தனர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அருகருகே நின்று கொண்டிருந்தனர். சிலர் முகக்கவசம் அணியாமல் சந்தையில் சுற்றி திரிந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. இந்த வேளையில் ஆட்டு சந்தையில் சமூக இடைவெளியின்றி வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்தது மேலும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தும். அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஆட்டு சந்தை நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


Next Story