‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் ரூ.985 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு


‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் ரூ.985 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 31 July 2020 1:03 AM GMT (Updated: 31 July 2020 1:03 AM GMT)

வேலூர் மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.985 கோடியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர்,

மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப் பட்டு இந்த திட்டத்தின் கீழ் மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் அமைத்தல், வீடுகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பு, கோட்டை அழகுபடுத்துதல், பாதாள சாக்கடை திட்டம், வணிகவளாகங்கள் கட்டுதல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வரு கின்றன. வேலூர் மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.

தொரப்பாடி நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் காற்றின் தரத்தை அறியும் கருவிகள் பொருத்தப் பட்டுள்ளதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கருவியின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி காணப் பட்டால் சளிமாதிரி பரிசோதனை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத் தினார்.

புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள்

அதைத்தொடர்ந்து சதுப்பேரியில் காணப்படும் குப்பையை தரம் பிரித்து அகற்றுவதற்காக பின்லாந்து நாட்டில் இருந்து வந்துள்ள நவீன எந்திரத்தை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் குப்பைகளை அகற்றுவது தொடர்பாக செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், பணி மேற்பார்வையாளர் களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் கோட்டை அகழி தூர்வாருதல், புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகள், நவீன வாகன நிறுத்துமிடம், வணிக வளாகங்கள் கட்டுதல், சாலை, பூங்கா அமைக்கும் பணிகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

ரூ.985 கோடியில்...

இந்த ஆய்வு குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களிடம் கூறிய தாவது:-

வேலூர் மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.985 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் 35 கிலோ மீட்டருக்கு ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி மையங்கள், பாதாள சாக்கடை திட்டம், நவீன வாகன நிறுத்துமிடம், 140 அரசு கட்டிடங்களில் சோலார் தகடுகள் பொருத்துதல், சூரியஒளியில் மின்சாரம் தயாரித்தல், கோட்டையை அழகு படுத்துதல் உள்ளிட்டவை முக்கியமானவைகளாகும்.

வேலூர் மாவட்டத்தில் 59 ஆயிரத்துக்கும் மேற் பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு உள்ளது. தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கையை குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது காணப்படும் கட்டுப் பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

காட்பாடி

அதைத்தொடர்ந்து காட்பாடி காந்திநகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் சர்க்கார் தோப்பு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலைய பணிகளை பார்வையிட்டார்.

ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் சங்கரன், உதவி கமிஷனர் செந்தில்குமார், என்ஜினீயர் சீனிவாசன், நகர்நல அலுவலர் சித்ரசேனா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story