தக்கலை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து தொலைபேசி சேவை பாதிப்பு


தக்கலை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து   தொலைபேசி சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 31 July 2020 3:38 AM GMT (Updated: 31 July 2020 3:38 AM GMT)

தக்கலை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டது.

பத்மநாபபுரம்,

தக்கலையில் அமலா கான்வென்ட் சந்திப்பு பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. 2 மாடி கொண்ட கட்டிடத்தில் இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

நேற்று காலை 6.30 மணிக்கு திடீரென அலுவலகத்தின் கீழ் தளம் மற்றும் முதல் மாடியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. பின்னர் இந்த புகை குபுகுபுவென பற்றியபடி வெளியேறி கொண்டிருந் தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பி.எஸ்.என்.எல். அலுவலக காவலாளி உடனடியாக தக்கலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

பரபரப்பு

உடனே நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். மாடிக்கு செல்ல ஏணிப்படியில் ஏறியும், கீழ்தளத்தில் நின்றபடியும் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர். இதனால் சுமார் ½ மணி நேரம் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த திடீர் தீ விபத்தால் அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், தொலைபேசிகள் மற்றும் ஏராளமான உபகரணங்களும் சேதமடைந்தன. அதே சமயத்தில் தீ விபத்தால் பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை, தொலைபேசி சேவை உடனடியாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சேவை பாதிப்பை சரி செய்யும் பணியில் உடனடியாக ஈடுபட்டனர். இதனால் செல்போன் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனால் தொலைபேசி சேவை மட்டும் வெகுநேரமாக செயல்படவில்லை. பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story