ரூ.30 கோடியில் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் கதவணை: முதல்-அமைச்சர், காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார் பாரதி எம்.எல்.ஏ. அறிக்கை
ரூ. 30 கோடியில் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் கதவணை கட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
திருவெண்காடு,
பாரதி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் கதவணை
சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநகரில் வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் கோடை காலங்களில் கடல்நீர் உட்புகுவதால் திருமுல்லைவாசல், திருநகரி, புதுத்துறை, வெள்ளப்பள்ளம், சட்டநாதபுரம், காரைமேடு, சீர்காழி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உப்பு நீராக மாறும் நிலை இருந்து வந்தது.
இந்தநிலையில் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 50 ஆண்டுகளாக ஆற்றில் கடல்நீர் உட்புகாதவாறு தடுப்பணை அமைக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாரதி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரிடம் திருநகரி வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.30 கோடி மதிப்பீட்டில் திருநகரி வெள்ளப்பள்ளம் உப்பனாற்றில் கதவணை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இதன் மூலம் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு சீர்காழி சட்டமன்ற தொகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
கிட்டி அணை
மேலும் கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்காஸ் கிராமத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கிட்டி அணை கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட உள்ளது. இதேபோல் சீர்காழி ஒன்றித்துக்கு உட்பட்ட தென்னம்பட்டினம் ஊராட்சியில் உப்பனாற்றில் கடல் நீர் உட்புகாதவாறு ரூ.7 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீர்காழி சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்காக பல்வேறு வகையிலும் நிதி உதவி வழங்கி வரும் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆகியோருக்கு சீர்காழி சட்டமன்ற தொகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story