சிவசேனா கூட்டணி அரசாங்கம் பிளவுபட்ட குடும்பம் பட்னாவிஸ் தாக்கு


சிவசேனா கூட்டணி அரசாங்கம் பிளவுபட்ட குடும்பம் பட்னாவிஸ் தாக்கு
x
தினத்தந்தி 31 July 2020 7:16 PM GMT (Updated: 31 July 2020 7:16 PM GMT)

சிவசேனா கூட்டணி அரசாங்கம் பிளவுபட்ட குடும்பம் என்று எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

மராட்டியத்தில் கொள்கையில் முரண்பட்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அவ்வபோது உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனா பிரச்சினையில் முடிவுகளை எடுப்பதில் காங்கிரஸ் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அக்கட்சி மந்திரிகள் பாலசாகேப் தோரட், அசோக்சவான் ஆகியோர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசியதை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது. பின்னர் கருத்து தெரிவித்த மந்திரி பாலசாகேப் தோரட், இந்த கூட்டணி ஒரு குடும்பம் போன்றது, அதில் அங்கம் வகிப்பவர்கள் சகோதரர்களை போன்றவர்கள் என்றார்.

இந்தநிலையில், மும்பையில் மராத்தி செய்தி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா கூட்டணி அரசு ஒரு குடும்பம் அல்ல. அது ஒரு லிவ் இன் ரிலேஷன்ஷிப் என விமர்சித்து உள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

பிளவுபட்ட குடும்பம்

நாங்கள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க போவதில்லை. அதில் எங்களுக்கு ஆர்வமும் இல்லை. கருத்தியல் ரீதியாக வேறுபட்ட கட்சிகளின் அரசாங்கம் நாட்டில் ஒருபோதும் நிலையாக இருந்தது இல்லை. மகா விகாஷ் அகாடி போன்ற ஆட்சி தப்பிக்க காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. அவர்களிடையே பெரும் முரண்பாடு உள்ளது. பாலசாகேப் எதையும் சொல்லட்டும். ஆனால் அது ஒரு குடும்பம் அல்ல. அவர்களுடையது ஒரு பிளவுபட்ட குடும்பம். தவறான வார்த்தையே பயன்படுத்துவதற்கு என்னை மன்னிக்க வேண்டும். இந்த கூட்டணி ஒரு லிவ் இன் ரிலேஷன்ஷிப்.

இந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது. அது தானாகவே கவிழும். அது கவிழும் நாளில் நாங்கள் ஆட்சியில் இருப்போம். நாங்கள் ஒரு வலுவான அரசை கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story