கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக கவர்னருடன் எடியூரப்பா ஆலோசனை


கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக கவர்னருடன் எடியூரப்பா ஆலோசனை
x
தினத்தந்தி 31 July 2020 11:10 PM GMT (Updated: 31 July 2020 11:10 PM GMT)

கர்நாடகத்தில் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கவர்னருடன், முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார். வருகிற 10-ந் தேதிக்குள் புதிய மந்திரிகள் பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்தது.

மந்திரிசபைவிரிவாக்கம்

இந்த ஆட்சி அமைந்து ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. மந்திரிசபையில் 6 இடங்கள் காலியாக உள்ளது. பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்த ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ், அரவிந்த் லிம்பாவளி, யோகேஷ்வர் தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவை வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.

மந்திரிசபையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கும் பா.ஜனதாவில் 20-க்கும் மேற்பட்டோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேறு கட்சிகளில் இருந்து வந்து ஆட்சி அமைய காரணமாக இருந்த ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத் உள்ளிட்டோருக்கு கண்டிப்பாக மந்திரி பதவி வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றி அமைப்பதா? என்பது குறித்து எடியூரப்பா ஆலோசித்து வருகிறார்.

கவர்னருடன் சந்திப்பு

இந்த நிலையில், நேற்று காலையில் ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா திடீரென்று சென்றார். அவருக்கான நிகழ்ச்சி பட்டியலில் கவர்னரை சந்திப்பது குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதனால் அவர் திடீரென்று கவர்னரை சந்தித்து பேசி இருந்தார்.

அப்போது எடியூரப்பாவுடன் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மையும் உடன் சென்றிருந்தார். இந்த சந்திப்பின் போது மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கவர்னர் வஜூபாய் வாலாவுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் விளக்கி கூறியதாக தெரிகிறது.

10-ந்தேதிக்குள் விரிவாக்கம்

கவர்னர் வஜூபாய் வாலாவுக்கு உடல் நலக்குறைவு இருந்து வருகிறது. மேலும் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் தனது சொந்த ஊரான குஜராத்திற்கு சென்று சில நாட்கள் ஓய்வெடுக்க திட்டமிட்டு உள்ளார். மந்திரிசபை விரிவாக்கம் செய்ய எடியூரப்பா ஆலோசித்து வருவதால், வருகிற 10-ந் தேதிக்குள் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும், அதுவரைக்கும் குஜராத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் கவர்னரிடம் முதல்-மந்திரி எடியூரப்பா கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 நிமிடங்களுக்கு மேலாக கவர்னருடன் பேசிவிட்டு எடியூரப்பா புறப்பட்டு சென்றார்.

இதுகுறித்து மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது;-

அலட்சியமாக இருக்க வேண்டாம்

கவர்னர் வஜூபாய் வாலாவை மரியாதை நிமித்தமாக முதல்-மந்திரி எடியூரப்பா சந்தித்து பேசினார். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்தும், அதனை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கவர்னரிடம் விளக்கமாக எடுத்து கூறப்பட்டது. கவர்னரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படியும், அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். கொரோனா குறித்தும், பா.ஜனதா அரசு ஒரு ஆண்டை நிறைவு செய்தது குறித்தும் பேசினோம்.

மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக கவர்னருடன் எந்த விதமான ஆலோசனையும் நடத்தவில்லை. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, பா.ஜனதா மேலிட தலைவர்கள் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி செல்ல முடிவு

இதற்கிடையே கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் வருகிற 10-ந் தேதிக்குள் நடைபெறுவது உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதற்கு முன்பாக மந்திரிசபையில் யாரை சேர்ப்பது, யாரை நீக்குவது என்பது குறித்து பா.ஜனதா தேசிய தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்துள்ளார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து தலைவர்களுடன் பேசுவதற்காக நேரம் கேட்டு இருப்பதாகவும், இந்த வாரத்திற்குள் முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி செல்லலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசி, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா இறுதி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் தற்போது பதவியில் இருக்கும் சசிகலா ஜோலே, பிரபு சவான், கோடா சீனிவாஸ் பூஜாரி உள்பட 5 பேர் நீக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ், உமேஷ் ஹட்டி, ராமதாஸ், யோகேஷ்வர் ஆகிய 5 பேருக்கு மந்திரி பதவி உறுதி என்றும், எச்.விஸ்வநாத்திற்கு பதவி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

Next Story