இம்மாத இறுதியில் கொரோனாவுக்கு 6 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்


இம்மாத இறுதியில் கொரோனாவுக்கு 6 ஆயிரம் பேர் பாதிக்கப்படுவார்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 1 Aug 2020 5:28 AM IST (Updated: 1 Aug 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

இம்மாத இறுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

அரசு நலவழித்துறை, குயவர்பாளையம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம்- ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி சார்பில் நேற்று காலை புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. முகாமை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், திட்ட இயக்குனர்கள் டாக்டர் ஸ்ரீராமுலு, டாக்டர் ரமேஷ், கோவிட் பொறுப்பு டாக்டர் ஜான்சன் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நல்வாழ்வு மைய பொறுப்பு மருத்துவ அதிகாரி அஸ்வினி வரவேற்றார். முகாமில் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

நடமாடும் பரிசோதனை மையம்

அப்போது அங்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பிம்ஸ், மகாத்மாகாந்தி மருத்துவ கல்லூரி, ஜிப்மர் ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அனைவரும் பரிசோதனை செய்தால் தான் கொரோனாவின் தாக்கத்தை குறைக்க முடியும். இதை கருத்தில் கொண்டு நடமாடும் பரிசோதனை முகாமை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் கொரோனா நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.

பணியாளர் நியமனம்

கொரோனா நோயாளிகளை 5 வகையாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல் பிரிவில் அறிகுறி உள்ளவர்களை வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிப்பது, சிறிது பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பவர்கள், நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிட சிரமப்படுபவர்கள், நீரிழிவு, ரத்த கொதிப்பு உள்ளவர்கள் என பிரித்து அவர்களுக்கு ஏற்ப சிகிச்சை அளித்து வருகிறோம்.

தொற்றால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இது 63 சதவீதம் ஆகும். அதுபோல் 49 பேர் இறந்துள்ளனர். இறப்பு விகிதத்தை குறைக்கவும், குணமடைந்து செல்வோரின் சதவீதத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இம்மாத இறுதியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கேற்ப படுக்கைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். மேலும் தேவைப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story