புதுவையில் ஆகஸ்டு-31 வரை ஊரடங்கு இ-பாஸ் முறை தொடரும் என நாராயணசாமி அறிவிப்பு


புதுவையில் ஆகஸ்டு-31 வரை ஊரடங்கு இ-பாஸ் முறை தொடரும் என நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2020 5:30 AM IST (Updated: 1 Aug 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள், ஓட்டல்களை திறக்க அனுமதிக்கப் படும். ஆகஸ்டு 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், இ-பாஸ் முறை தொடரும் என்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி,

உலகையே கொரோனா மிரட்டிக் கொண்டிருக்கிறது.

அமைச்சரவை கூட்டம்

தொற்று வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்த கட்டங்களில் ஊரடங்கு பல கட்டமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையவில்லை. கடைசியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்ததையொட்டி ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை அமல்படுத்தப்பட உள்ள 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தது.

இதையடுத்து புதுவை மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகசபை நிர்வாகிகள், வியாபாரிகளுடன் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில் நேற்று மாலை அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், மாவட்ட கலெக்டர் அருண், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் கட்சிகளுக்கு தடை

மத்திய அரசு அறிவித்துள்ள 3-ம்கட்ட பொது முடக்க தளர்வுகளில் ஒரு சில கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் கலையரங்கம் ஆகியவை வருகிற 31-ந் தேதி வரை திறக்கக்கூடாது என்றும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேரும் மட்டுமே பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில், வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம், யோகாசனக் கூடங்களை வருகிற 5-ந்தேதி முதல் திறக்கலாம் என்றும் அதற்கான விதிமுறைகளை விரைவில் அறிவிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பொது இடங்களில் மக்கள் கூடக்கூடாது. அரசியல் கட்சிகள் ஊர்வலம், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுகள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. பொது மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மதம் சம்பந்தமான விழாக்கள் நடத்தக்கூடாது. வழிபாட்டுத்தலங்களில் விதிமுறைகளுக்குட்பட்டு வழிபட வேண்டும்

இரவு 9 மணி வரை திறக்க அனுமதி

மத்திய அரசு வழிகாட்டுதலின்படி சுதந்திர தினவிழா கொண்டாடப்படும். விழாவில் முக்கிய நபர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் விழாவில் கவுரவிக்கப்படுவார்கள். விழாவில் கலந்து கொள்வோர் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் குறைந்த எண்ணிக்கையிலே கலந்து கொள்ளும் வகையில் நடைமுறைகள் அமல்படுத்தப்படும்.

புதுவையில் ஓட்டல்கள், மால்கள் திறக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ஓட்டல்கள், கடைகள் காலை 6 முதல் 8 மணி வரை மட்டுமே திறந்து இருக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக வியாபாரிகளிடம் ஆலோசனை நடத்தியபோது இரவு 9 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று புதுவையில் இனிமேல் இரவு 9 மணி வரை ஓட்டல்கள், கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது

இரவு 9 முதல் காலை 5 மணி வரை பொது ஊரடங்கு அமலில் இருக்கும். மாநிலத்தில் படிப்படியாக கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி சில கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைக்குள் வர இ-பாஸ் நடைமுறை தொடரும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கிடையாது. அப்படி முழு ஊரடங்கை அமல்படுத்தினால் சனிக்கிழமை கூட்டம் அதிகரித்து கொரோனா அதிகம் பரவ வாய்ப்பு உருவாகும். இந்த உத்தரவுகள் இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வரும்.

மாகி பிராந்தியத்தில் கேரள அரசு எடுக்கும் நடைமுறையும், ஏனாம் பிராந்தியத்தில் ஆந்திர அரசு எடுக்கும் நடைமுறையும் கடைபிடிக்கப்படும். மேலும் சில தளர்வுகள் குறித்து அடுத்த 10 நாட்களுக்கு பிறகு அமைச்சரவை கூடி முடிவு செய்யப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்கள் கண்டிப்பாக ஒத்துழைப்பு தரவேண்டும். அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்மரில் படுக்கைகளை உயர்த்தித் தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். அதன் அடிப்படையில் தற்போது 150 படுக்கைகளை உயர்த்தித் தருவதாக ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story