தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் திடீர் முற்றுகை


தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 1 Aug 2020 1:22 AM GMT (Updated: 1 Aug 2020 1:22 AM GMT)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை வ.உ.சி. பூ மார்க்கெட் வியாபாரிகள் திடீர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு சைக்கிள் நிறுத்தும் இடங்கள், திருமண மண்டபங்கள், கழிப்பறைகளை மாநகராட்சி கையகப்படுத்தி, அவற்றை மாநகராட்சியே நடத்தி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டையும், மாநகராட்சி நடத்த முடிவு செய்து உள்ளது. அதன்படி அங்குள்ள கடைகள் அனைத்தும் ஏற்கனவே அளவீடு செய்யும் பணிகள் நடந்தன.

அதன் அடிப்படையில் கடைகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டணம் அதிகப்படியாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாவும், கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வ.உ.சி. மார்க்கெட் வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு, நேற்று காலை திடீரென மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலனை சந்தித்து, கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினர். ஆனாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதன்பிறகு வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக, மாநகராட்சியில் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story