சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: பென்னிக்ஸ் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: பென்னிக்ஸ் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை வாக்குமூலத்தை பதிவு செய்தனர்
x
தினத்தந்தி 2 Aug 2020 4:30 AM IST (Updated: 1 Aug 2020 11:08 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக, பென்னிக்சின் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சாத்தான்குளம் போலீஸ் நிலையம், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது வீடு, செல்போன் கடை உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. எனினும் மற்ற சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தன்று சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தபோது, அங்கிருந்த பென்னிக்சின் நண்பரான வக்கீல் மணிமாறனை வெளியே அனுப்பி விட்டு, தந்தை-மகன் ஆகிய 2 பேரையும் போலீசார் தாக்கினர். தொடர்ந்து அவர்களது அலறல் சத்தத்தை போலீஸ் நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த பென்னிக்சின் நண்பர்கள் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, சாத்தான்குளம் மாதாங்கோவில் தெருவில் உள்ள வக்கீல் மணிமாறனின் அலுவலத்துக்கு சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு அழகர்சாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று மதியம் வந்தனர். அங்கு வக்கீல் மணிமாறனிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், தொடர்ந்து பென்னிக்சின் நண்பர்களான வக்கீல்கள் ராமச்சந்திரன், ராஜாராம் ஆகியோரிடமும் தனித்தனியாக விசாரித்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

பின்னர் பென்னிக்சின் நண்பர்களான ரவிசங்கர், சுடலைமுத்து, சங்கரலிங்கம் ஆகியோரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கோவில்பட்டி கிளை சிறைக்கு காரில் அழைத்து சென்ற டிரைவரான நாகராஜிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பென்னிக்சின் மற்றொரு நண்பரான ஆரோக்கியசாமி விசாரணைக்கு ஆஜராகாததால், அவரது வீட்டு முகவரிக்கு சம்மன் அனுப்பி வைத்து விட்டு, சி.பி.ஐ. அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். சாத்தான்குளத்தில் பென்னிக்சின் நண்பர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story