குழந்தைகளின் கல்விக்காக தாலியை அடகு வைத்த பெண்ணின் குடும்பத்துக்கு குவியும் நிதி உதவி


குழந்தைகளின் கல்விக்காக தாலியை அடகு வைத்த பெண்ணின் குடும்பத்துக்கு குவியும் நிதி உதவி
x
தினத்தந்தி 1 Aug 2020 10:51 PM GMT (Updated: 1 Aug 2020 10:51 PM GMT)

குழந்தைகளின் கல்விக்காக தாலி சங்கிலியை அடகு வைத்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதி உதவி குவிந்து வருகிறது.

கதக்,

கொரோனா பாதிப்பு கர்நாடகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆன்-லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏழை குழந்தைகளுக்கு இந்த ஆன்-லைன் கல்வி எட்டாக்கனியாக இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் நரகுந்து தாலுகா ராதேரா நாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு மொத்தம் 4 பிள்ளைகள் உள்ளனர். இதில் ஒரு மகன் 6-ம் வகுப்பும், ஒரு மகள் 8-ம் வகுப்பும் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். தற்போது கொரோனாவால் கர்நாடக பள்ளி கல்வித் துறை சார்பில் சந்தனா சேனலில் ஆன்-லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்கனவே இருந்த டி.வி. பழுதடைந்து பல மாதங்கள் ஆவதால், அந்த குழந்தைகள் கல்வி கற்க முடியாத நிலை இருந்தது.

இதனால் கஸ்தூரி தனது தாலி சங்கிலியை அடகு வைத்து பிள்ளைகளின் படிப்புக்காக டி.வி.யை வாங்கி கொடுத்தார். இதுதொடர்பான செய்திகள் கன்னட செய்தி தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்களில் வெளியாகியது. இதைதொடர்ந்து மாநில கனிமவளத் துறை மந்திரியும், கதக் மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சி.சி.பட்டீல் குழந்தைகளின் கல்விக்கு நிதி உதவி வழங்குவதாகவும், அவர்களை படிக்க வைப்பது தனது பொறுப்பும் என்று அறிவித்தார். அத்துடன், கஸ்தூரியின் தாலி சங்கிலியை வாங்கி பணம் கொடுத்த அடகு கடைக்காரரும், அந்த தாலி சங்கிலியை நேற்று முன்தினம் திருப்பி கொடுத்து மனிதநேயத்தை வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் கொரோனாவால் வேலை இழந்து தவித்து வரும் கஸ்தூரி குடும்பத்திற்கு பல்வேறு தரப்பினரும் நிதி உதவி, குழந்தைகளின் படிப்புக்காக உதவி அளித்து வருகிறார்கள். பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமது கான் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார்.

அதாவது குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரத்தையும், குழந்தைகளின் படிப்புக்காக ரூ.35 ஆயிரத்தையும் அவர் வழங்குவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி தனது உதவியாளர் ஒருவர் மூலம் அந்த நிதி, கஸ்தூரியிடம் ஜமீர் அகமதுகான் வழங்கினார். மேலும் ஏதாவது உதவி தேவைப்பட்டால், தன்னை தொடர்பு கொள்ளும்படியும் கஸ்தூரியை செல்போனில் தொடர்பு கொண்டு அவர் தெரிவித்துள்ளார்.

அதுபோல் மந்திரி சி.சி.பட்டீல், தனது ஆதரவாளர்கள் மூலம் கஸ்தூரியிடம் ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும், கஸ்தூரியின் வீட்டுக்கு நேற்று சென்று அவர்களது குடும்ப பின்னணி, பொருளாதாரம் பற்றி கேட்டறிந்துள்ளனர்.

குழந்தைகளின் படிப்புக்காக 3 ஆண்டுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் நிதி உதவி வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அத்துடன் பல்வேறு தொண்டு நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் குழந்தைகளின் கல்விக்காக நிதி உதவி வழங்கி வருகிறார்கள்.

Next Story