கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளை 6 மாத காலத்துக்கு அரசுடைமையாக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனு அளிக்க வந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமையில் நிர்வாகிகள், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், “தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிற சூழ்நிலையில் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களாக நோய் தொற்று கண்டறியப்பட்ட பலரும் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த பகுதி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டால், உரிய இடவசதி இல்லை என்று பதில் சொல்கிறார்கள். நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் வீட்டிலேயே இருப்பதால் அந்த பகுதி பொதுமக்களுக்கும் நோய் பரவி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, புதிதாக பாதிக்கப்படுபவர்களை பாதுகாக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து மூடியே இருக்கும் தனியார் மருத்துவமனைகளை 6 மாத காலத்துக்கு அரசுடைமையாக்கி மக்களுக்கு படுக்கை வசதி, கழிப்பறை வசதிகளோடு சிகிச்சை அளிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
இதேபோல், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பக்கீர் மைதீன், பொதுச்செயலாளர் முகமது சாதிக் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில், “தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள தனியார் ஆம்புலன்ஸ் சங்க நிர்வாகிகள் கூட்டு சேர்ந்து தொடர்ச்சியாக மக்களிடம் கூடுதல் தொகை கேட்பது அதிகரித்து வருகிறது. ஆம்புலன்ஸ் வாகனத்தை அத்தியாவசிய தேவைக்கும் பயன்படுத்தும் மக்களிடம் ரசீது வழங்காமல் குறைவான தூரம் உள்ள இடங்களுக்கு கூட ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கேட்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் கூடுதல் பணம் கேட்டும், ரசீது தராமலும் இருக்கும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அரசு அறிவித்த சட்டவிதிகளின்படி கட்டணம் வசூலிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
கடந்த ஆண்டு போலீஸ் பணிக்கான எழுத்துத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தேனி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அளித்த மனுவில், “கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று, 8 ஆயிரத்து 888 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதற்கு பின்பும் தமிழ்நாட்டில் போலீஸ் பற்றாக்குறை உள்ளதை கருத்தில் கொண்டு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் காலிப்பணியிடம் நிரப்பப்படும் என்று தெரிவித்தார். தற்போதைய சூழலில் போலீஸ் எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டால் கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதோடு, அரசின் நிதி நெருக்கடி இன்னும் அதிகமாகும். எனவே, கடந்த ஆண்டு அனைத்து தகுதிச் சுற்றுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை போலீஸ் பணிக்கு அமர்த்தினால் அரசுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படாது. அவ்வாறு எங்களுக்கு வாய்ப்பு அளித்தால் 6 மாத பயிற்சி காலத்திற்கு சம்பளமும் தேவையில்லை” என்று கூறியிருந்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள வைகை புதூர் பொதுமக்கள் சார்பில் முருகேசன் என்பவர் அளித்த மனுவில், “எங்கள் ஊரில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சிலர் பட்டா பெற்றுள்ளனர். அந்த பட்டாவை ரத்து செய்து வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவாக வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story