இடைவிடாத மழையால் முடங்கி போன மும்பை


இடைவிடாத மழையால் முடங்கி போன மும்பை
x
தினத்தந்தி 4 Aug 2020 6:55 PM GMT (Updated: 4 Aug 2020 6:55 PM GMT)

இடைவிடாத மழையால் மும்பை நகர் முடங்கி போனது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மும்பை,

மும்பையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த இடைவிடாத மழையால் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. தாதர் இந்து மாதா, தாதர் டி.டி., சயான், மாட்டுங்கா, கிங்சர்க்கிள், அந்தேரி, பைகுல்லா, பிரபாதேவி, செம்பூர், முல்லுண்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியது. சயான், மாட்டுங்கா போலீஸ் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.

கிழக்கு விரைவு சாலையில் கிங்சர்க்கிள் பகுதியில் ஆறுபோல வெள்ளம் ஓடியதால் சயான்- தாதா் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் பல இடங்களில் வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கி கொண்டன. இதேபோல 60 வழித்தடங்களில் பஸ்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.

ஒரு சில இடங்களுக்கு பஸ்கள் ஓடாததால் பாதிவழியில் சிக்கிய மக்கள் இடுப்பு அளவு தண்ணீரில் நடந்து சென்று வீடு திரும்பினர்.

மண் சரிவு

மும்பை சென்ட்ரலில் உள்ள நாயர் ஆஸ்பத்திரி முன் வெள்ளம் தேங்கியது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்ட ஆஸ்பத்திரி பணியாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இதேபோல காந்திவிலி பகுதியில் மேற்கு விரைவு சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும், காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என தீயணைப்பு துறையினர் கூறினர். மண்சரிவில் சிக்கிய கார் மீட்கப்பட்டது.

ரெயில் சேவை பாதிப்பு

பலத்த மழை காரணமாக தாதர், பிரபாதேவி, சுன்னாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்பட்ட மின்சார ரெயில்சேவையும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மத்திய ரெயில்வே, துறைமுக வழித்தடம், மேற்கு ரெயில்வே ஆகிய 3 வழித்தடங்களிலும் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பணியாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதேபோல எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன.

இந்தநிலையில் பலத்த மழை காரணமாக மும்பை ஐகோர்ட்டில் நேற்று ஆன்லைன் மூலமும் வழக்கு விசாரணை எதுவும் நடைபெறவில்லை. மழை காரணமாக கோர்ட்டு ஊழியர்கள் பணிக்கு வரமுடியாமல் போனதால் நேற்று நடைபெற இருந்த வழக்கு விசாரணைகள் புதன்கிழமை (இன்று) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

இதேபோல மழைக்காரணமாக நேற்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது அத்தியாவசியமற்ற பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலகங்கள் 15 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே செயல்பட்டு வருகிறது. எனினும் பலத்த மழை காரணமாக மும்பை மற்றும் மும்பை புறநகரில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்தது

வெள்ளம் தேங்கிய பகுதிகளை மந்திரி ஆதித்ய தாக்கரே, மேயர் கிஷோரி பெட்னேகர், மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.

விடிய, விடிய இடைவிடாமல் பெய்த மழையால் சாலை, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நேற்று மும்பை முடங்கியது. ஏற்கனவே கொரோனாவால் பரிதவித்து வரும் மக்களின் இயல்பு வாழ்க்கை மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

Next Story