ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு எப்படி முட்டை வழங்குவது? அரசு முடிவு செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு


ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு எப்படி முட்டை வழங்குவது? அரசு முடிவு செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2020 1:15 AM GMT (Updated: 5 Aug 2020 1:15 AM GMT)

மாணவர்களுக்கு எப்படி முட்டை வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு முட்டைகளை வீட்டிற்கு சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஆர்.சுதா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர், “மாணவர்களுக்கு முட்டைகளை வாரம் அல்லது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மொத்தமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று உத்தரவிட்டனர். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து முட்டை வழங்குவது பாதுகாப்பாக இருக்காது. இதனால் பிரச்சினை ஏற்படும் என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

பிரச்சினைக்கு தீர்வு

இதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் கருத்தை மேற்கோள் காட்டி, பிரச்சினைக்குரிய காரணத்தை கூறாமல், அதற்கான தீர்வை காணவேண்டும் என்றும் முட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, “கொரோனா தொற்று பரவி வருவதால் மாணவர்களை தினமும் பள்ளிகளுக்கு அழைத்து இலவச முட்டைகள் வழங்குவது பாதுகாப்பாக இருக்காது. தற்போதுள்ள சூழலில் முட்டை கொள்முதல் செய்வதில் சில இடர்பாடுகள் உள்ளது” என்றார்.

அரசின் கடமை

அதற்கு நீதிபதிகள், “வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க உடலில் எதிர்ப்பு சக்தி தேவை. ஊட்டச் சத்தான உணவு வேண்டும். அதனால் மாணவர்களுக்கு வழங்கவேண்டிய முட்டைகளை மொத்தமாக வழங்கினால், அந்த மாணவன் மட்டுமல்லாமல், அவனது குடும்பமே பயன் அடையும். மாணவர்களின் நலனை பேணுவதுதான் அரசின் கடமை. அதனால், பெற்றோரை பள்ளிக்கூடத்துக்கு வரவழைத்து வாரம் ஒருமுறை முட்டைகளை மொத்தமாக வழங்கலாம். இந்த முட்டைகளை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு முடிவு செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Next Story