குற்றாலத்தில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு காட்டாற்றில் அடித்து வரப்பட்ட காட்டுப்பன்றி ஐந்தருவியில் விழுந்து சாவு


குற்றாலத்தில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு காட்டாற்றில் அடித்து வரப்பட்ட காட்டுப்பன்றி ஐந்தருவியில் விழுந்து சாவு
x
தினத்தந்தி 5 Aug 2020 1:43 AM GMT (Updated: 2020-08-05T07:13:56+05:30)

குற்றாலம் அருவிகளில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்றில் அடித்து வரப்பட்ட காட்டுப்பன்றி ஐந்தருவியில் விழுந்து செத்தது.

தென்காசி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஜூன் மாதம் சீசன் தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் அருவிகளில் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது. கடந்த 3 நாட்களாக குற்றாலம் பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை நீடித்ததால், நேற்று 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் சீறிப்பாய்ந்து விழுந்தது. காலையில் இருந்தே குற்றாலத்திலும் பலத்த சாரல் மழை பெய்தது.

அடித்து வரப்பட்ட காட்டுப்பன்றி

இந்த நிலையில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஒரு காட்டுப்பன்றி ஐந்தருவியில் விழுந்து இறந்து கிடந்தது. அதன் முகத்தின் தாடையில் கற்களால் அடிபட்ட பலத்த காயம் இருந்தது. இதுகுறித்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், வனத்துறையினர் வந்து காட்டுப்பன்றியின் உடலை மீட்டு பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். அந்த காட்டுப்பன்றிக்கு 8 வயது இருக்கும் என்றும், 100 கிலோ எடை இருந்தது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். தற்போது குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டினாலும் ஊரடங்கு தடையால் சுற்றுலா பயணிகள் இன்றி அருவிக்கரைகள் வெறிசோடி கிடக்கின்றன.

Next Story