மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை: பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு


மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை: பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் ‘கிடுகிடு’ உயர்வு
x
தினத்தந்தி 5 Aug 2020 7:21 AM IST (Updated: 5 Aug 2020 7:21 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்ட போதிலும், அவ்வப்போது ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் சில நேரங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பகல் முழுவதும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது.

நீர்மட்டம் உயர்வு

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி, பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1,837 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று 4,077 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் 61.90 அடியில் இருந்து 67.60 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5.70 அடி உயர்ந்து உள்ளது.

இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11.81 அடி உயர்ந்துள்ளது. அதாவது 77.03 அடியில் இருந்து 88.84 அடியாக அதிகரித்து உள்ளது.

மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து வெறும் 8 கன அடி என்ற நிலையில் இருந்து 48 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 55 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 118 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 62.10 அடியாக இருந்தது.

கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 10 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வடக்கு பச்சையாறு மற்றும் நம்பியாறு அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

கடனா, ராமநதி

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை நிரம்பி வழிகிறது. 36.10 அடி உயரம் கொண்ட இந்த அணைக்கு வரும் 49 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. 85 அடி உயரம் கொண்ட கடனா நதி அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 42 அடியாக இருந்தது. இது ஒரே நாளில் 9.50 அடி உயர்ந்து 51.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 391 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 10 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 59 அடியில் இருந்து நேற்று 66.50 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 7.50 அடி உயர்ந்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 3 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 33.79 அடியில் இருந்து 6.89 அடி உயர்ந்து 40.68 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 150 கன அடியாக இருந்தது. 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டமும் 9 அடி உயர்ந்து 91 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 197 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 5 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.

தலையணையில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் களக்காடு தலையணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தடுப்பணையை மூழ்கடித்தவாறு காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தற்போது கொரோனா தடை உத்தரவு காரணமாக தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி தலையணை வெறிச்சோடி காணப்படுகிறது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

பாபநாசம் -33, சேர்வலாறு -18, மணிமுத்தாறு -5, கொடுமுடியாறு -50, ராதாபுரம் -3, கடனா -18, ராமநதி -18, கருப்பாநதி -48, குண்டாறு -52, அடவிநயினார் -48, ஆய்க்குடி -7.20, சங்கரன்கோவில் -1, தென்காசி -6, செங்கோட்டை -22.

Next Story