கடந்த 24 மணி நேரத்தில் குடகு மாவட்டத்தில் 142 மி.மீ. மழை கொட்டியது மேலும் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு


கடந்த 24 மணி நேரத்தில் குடகு மாவட்டத்தில் 142 மி.மீ. மழை கொட்டியது மேலும் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 5 Aug 2020 7:35 PM GMT (Updated: 2020-08-06T01:05:06+05:30)

குடகு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 142 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குடகு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதுபோல் காவிரி ஆற்றின் பிறப்பிடமாக உள்ள குடகு மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் காவிரி, சொர்ணாவதி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் குடகு மாவட்டத்தில் மடிகேரி, பாகமண்டலா, தலைக்காவிரி, சோமவார்பேட்டை, விராஜ்பேட்டை, கோணிகொப்பா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆங்காங்கே சிறிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் சில கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மடிகேரி அருகே நாபொக்லு, பாகமண்டலா, மூர்னாடு பகுதிகளில் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் நீர் சூழ்ந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் மடிகேரியில் இருந்து நாபொக்லு, பாகமண்டலா, மூர்னாடு செல்லும் சாலைகளை வெள்ள நீர் மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டு உள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு

குறிப்பாக பாகமண்டலா, தலைக்காவிரி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது பாகமண்டலாவில் உள்ள பாகமண்டலேஸ்வரா கோவில் மூடப்பட்டுள்ளது. தொடர் கனமழைக்கு நாகபொக்லுவில் உள்ள பழைய பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது. தற்போது கொரோனாவால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், அசம்பாவித சம்பவங்கள் நிகழவில்லை.

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மூர்னாடு-நாபொக்லு சாலையில் முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரு கிராம மக்களும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். சில இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.

மேலும் 3 நாட்கள் கனமழை பெய்யும்

இந்த நிலையில் குடகு மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 142 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மடிகேரியில் 154.60 மி.மீ. மழையும், பாகமண்டலா, தலைக்காவிரி பகுதியில் தலா 190.20 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தொடர் கனமழையால் ஹாரங்கி அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஹாரங்கி அணையில் 2,856.94 கன அடி தண்ணீர் உள்ளது. காவிரி ஆற்றில் இருந்து ஹாரங்கி அணைக்கு வினாடிக்கு 7,182 கனஅடி தண்ணீர் வருகிறது. இதனால் வினாடிக்கு 9,425 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் குடகு மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் இதுவரை 1,121.71 மி.மீ மழை பெய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு(2019) 939.16 மி.மீ. மழை தான் பெய்தது குறிப்பிடத்தக்கது.

குடகு மாவட்டத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பெய்து வரும் கனமழையால் குடகு மாவட்ட மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது மேலும் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story