முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்


முழுகொள்ளளவை எட்டியது துங்கா அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 6 Aug 2020 1:21 AM IST (Updated: 6 Aug 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

துங்கா அணை நேற்று முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் துங்கா ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவமொக்கா,

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தற்போது இந்த மழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், வடகர்நாடக மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் காவிரி, கிருஷ்ணா, மல்லப்பிரபா, துங்கா, துங்கபத்ரா, பத்ரா ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் மலைநாடு மாவட்டங்களில் ஒன்றான சிவமொக்காவில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சிவமொக்கா அருகே காஜனூரில் உள்ள துங்கா அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. கடல் மட்டத்தில் இருந்து 587.81 அடி கொள்ளளவு கொண்ட துங்கா அணையின் நீர்மட்டம் நேற்று மாலை முழுகொள்ளளவை எட்டியது. இதைதொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 21 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

59 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

அதாவது நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 54 ஆயிரத்து 479 கனஅடி நீர் வந்தது. அணை முழு கொள்ளவை எட்டியிருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 59 ஆயிரத்து 455 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதாவது அணையில் இருந்து துங்கா ஆற்றில் 58 ஆயிரத்து 310 கனஅடி நீரும், அணையின் வலது, இடது நீர்ப்பாசன கால்வாய்களில் 1 ஆயிரத்து 145 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையில் இருந்து துங்கா ஆற்றில் அதிகளவு நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால், இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. சிவமொக்கா நகரை ஒட்டி துங்கா ஆறு ஓடுகிறது. இதனால் துங்கா ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விட்டுள்ளது. மேலும் அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது. சிவமொக்கா டவுனில் ரெயில்வே மேம்பாலத்தை தொட்டப்படி வெள்ள நீர் பாய்ந்தோடி வருகிறது. இதை பலரும் சென்று வேடிக்கை பார்த்து வருகிறார்கள். மேலும் செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

ஜோக்நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

தொடர் மழை காரணமாக சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியிலும் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவது ரம்மியமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் வந்து அதன் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள். தற்போது கொரோனா பரவல் இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜோக் நீர்வீழ்ச்சி பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.

Next Story