தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.976 உயர்வு பவுன் ரூ.42,592-க்கு விற்பனை


தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது தங்கம் விலை ஒரேநாளில் பவுனுக்கு ரூ.976 உயர்வு பவுன் ரூ.42,592-க்கு விற்பனை
x
தினத்தந்தி 6 Aug 2020 2:59 AM IST (Updated: 6 Aug 2020 2:59 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.976 உயர்ந்து ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 592-க்கு விற்பனை ஆனது.

சென்னை,

தங்கம் விலை கடந்த 2 மாதங்களாக யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. அந்தவகையில் ஒவ்வொருநாளும் வரலாறு காணாத உச்சத்தை தொடர்ந்து தொட்டு வருகிறது. கடந்த மாதம் 27-ந்தேதியன்று ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்த நிலையில், 3 நாட்களுக்கு பிறகு (31-ந்தேதி) ரூ.41 ஆயிரத்தையும் தாண்டியது.

இந்த மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை உயர்வில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. ஆனால் அனைத்துக்கும் சேர்த்து நேற்று ஒரேநாளில் மொத்தமாக வேட்டு வைத்தது போல தங்கம் விலை எகிறி இருக்கிறது. அதாவது தங்கம் ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஒரேநாளில் ரூ.976 உயர்வு

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 202-க்கும், ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்து 616-க்கும் தங்கம் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. கிராமுக்கு ரூ.122-ம், பவுனுக்கு ரூ.976-ம் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.5 ஆயிரத்து 324-க்கும், ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்து 592-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து தங்கம் விலை அதிக அளவில் உயர்ந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. நேற்றைய விலை உயர்வு தான் இந்த ஆண்டில் இதுவரை ஒரேநாளில் அதிகபட்சமாக உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 500 அதிகரித்துள்ளது.

அதிகளவில் முதலீடு

அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்கான குறியீடு, வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் சரிந்து வருவது போன்ற காரணங்களினால் பெரிய முதலீட்டாளர்கள் பீதியில் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்து வருவதாலும், முதலீட்டாளர்களை போல எல்லா நாட்டுமக்களும் வைப்பு நிதியில் முதலீடு செய்வதை தவிர்த்து தங்கத்தின் மீது புதிதாக முதலீடு செய்ய தொடங்கி இருப்பதாலும் தங்கம் விலை இதுபோல் அதிரடியாக உயருவதாக மெட்ராஸ் வைரம், தங்கம் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறுகிறார்.

வெள்ளி விலையும் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று கிராமுக்கு 6 ரூபாய் 60 காசும், கிலோவுக்கு ரூ.6 ஆயிரத்து 600-ம் உயர்ந்து, ஒரு கிராம் 79 ரூபாய் 20 காசுக்கும், ஒரு கிலோ ரூ.79 ஆயிரத்து 200-க்கும் வெள்ளி விற்பனை ஆனது.

Next Story