இ-பாஸ் விவகாரம்: திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது


இ-பாஸ் விவகாரம்: திருச்சியை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2020 4:43 PM GMT (Updated: 6 Aug 2020 4:43 PM GMT)

இ-பாஸ் விவகாரத்தில் திருச்சியைச் சேர்ந்த 2 பேரை வேலூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்,

தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வரவும், பிற மாநிலங்களுக்கு சென்று வரவும் இ-பாஸ் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. இதனால் இ-பாஸ் கேட்டு பலர் விண்ணப்பித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுவதில்லை.

ஆனால், அவர்களிடம் மர்மநபர்கள் பணத்தை வாங்கி கொண்டு போலி இ-பாஸ் வினியோகித்து வருவதாக புகார்கள் வந்தன. இந்தநிலையில் வேலூர் மாவட்ட ‘வாட்ஸ் அப்’ குரூப் ஒன்றில் ரூ.1,500 கொடுத்தால் இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் செல்ல இ-பாஸ் வழங்கப்படும் என ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் சென்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது. அந்தத் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். அதில் வேலூர் பெரியஅல்லாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

2 பேர் கைது

அவரிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு திருச்சியைச் சேர்ந்த சிலர் உதவியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் திருச்சி விரைந்தனர். அதன்படி திருச்சி முத்தர்செய்நல்லூரை சேர்ந்த ஸ்டாலின் (வயது 26), கோட்டப்பட்டுவை சேர்ந்த வடிவேல் (27) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து, வேலூர் அழைத்து வந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story